You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மஹாராஷ்டிராவில் ஆட்கொல்லி பெண் புலி சுட்டுக்கொலை
மஹாராஷ்டிராவில் 13 பேரை கொன்றதாகக் கூறப்பட்ட பெண் புலி ஒன்று நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தேடுதல் வேட்டையில் அந்தப் புலி சிக்காமல் இருந்தது.
கடந்த மாதம், புலிகளைக் கவரும் வாடையை உண்டாக்கி அதைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
T-1 என்று பெயரிடப்பட்டிருந்த ஆறு வயதாகும் அந்தப் புலியைக் காக்க காட்டுயிர் செயல்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
ஆனால், அப்புலியை உயிருடன் பிடிக்க இயலவில்லையென்றால் அதைச் சுட்டுக் பிடிக்கலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அதைக் கொல்ல தடை விதிக்க மறுத்துவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா பகுதியில் அந்தப் புலியும் ஒன்பது மாதமாகும் அதன் இரு குட்டிகளும் மூவரைக் கொன்றதால், அப்பகுதியில் வாழும் சுமார் 5,000 பேர் உயிர் அச்சத்தில் இருந்தனர்.
அங்குள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் காடு மற்றும் வயல்களில் இருந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும், திறந்த வெளிகளில் மலம் கழிக்க செல்வதைத் தவிர்க்க வேண்டும், குழுக்களாக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்ட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு பரோட்டி எனும் கிராமத்தின் அருகில் அப்புலியின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் மூலம் தகவல் கிடைத்தபின் வனத்துறை அதிகாரிகளின் குழு ஒன்று மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கி உள்ளிட்டவற்றுடன் அங்கு சென்றனர்.
மயக்க ஊசி செலுத்தப்பட்டபின்னும் அப்புலி அதிகாரிகளின் வாகனத்தை நோக்கி சீறிக்கொண்டே வந்ததால், சுமார் எட்டு முதல் பத்து மீட்டர் தூரத்தில் இருந்து தற்காப்பு கருதி அதைச் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் ஒரு வயதாகும் அதன் குட்டிகள் இந்த நிகழ்வின்போது தங்கள் தாயுடன் இல்லை.
இந்தியாவில் சுமார் 2,200 புலிகள் உள்ளன. இது உலகில் காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 60% ஆகும்.
இந்தப் பெண் புலி கொல்லப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் 200 புலிகளில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் மட்டுமே புலிகள் சரணாலயம், தேசிய பூங்கா உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: