You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ரஃபால் குறித்து எத்தனை கேள்விகள் வந்தாலும் பதிலளிப்போம்" - நிர்மலா சீதாராமன் சிறப்புப் பேட்டி
ரஃபால் போர் விமான ஒப்பந்த விவகாரம் இந்தியாவில் பரவலாக சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், அது குறித்தும் தமிழக மீனவர்கள், இலங்கை விவகாரம் குறித்தும் பிபிசி தமிழ் செய்தியாளர் பரணி தரனுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து.
உலக அளவில் ரஃபால் விவகாரம் கவனத்தை ஈர்த்து பேசப்பட்டு வரும் நிலையில், அந்த விவகாரம் தரும் அழுத்தத்தை இந்திய அரசு எப்படி அணுகுகிறது?
எதிர்கட்சிகளான காங்கிரஸ், பாதுகாப்புத் துறை அமைச்சகம் மீது தேவைக்கு தகுந்தாற்போல முடிவெடுப்பதும், விரைந்து முடிவெடுப்பதும் குறிப்பாக ஊழல் இல்லாமல் முடிவெடுப்பது எப்படி சாத்தியமாகும் என்ற அசட்டு நம்பிக்கையில் எங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். அதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இந்திய அரசு பதில் அளித்து வருகிறது.
ஊழல் பற்றி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, பொறுப்பை உணர்ந்து குற்றம் சுமத்தப்பட்டாலும் மக்களை குழப்பும் வகையில், முன்பு ஒன்றும் பின்பு வேறுமாக குற்றம்சாட்டுவதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
முதலில் ரஃபால் போர் விமானங்கள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்கள். அதை தெரிவித்த பிறகு, ஏன் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் விளக்கம் அளித்தோம். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக பேரம் நடத்தியதாக குற்றம்சாட்டினார்கள். அதற்கும் பதில் அளித்தோம். அவர்கள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் பதில் அளித்துக் கொண்டிருப்பதை மக்களும் பார்க்கிறார்கள். பதில் தரும் நடவடிக்கையில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. எங்கள் பக்கம் உண்மை இருப்பதால் பதில் தந்து கொண்டே இருப்போம்.
36 தயார் நிலையில் இயங்கக் கூடிய போர் விமானங்களை உடனே வாங்க வேண்டிய தேவை இருப்பதாக இந்தியா கூறி ரஃபால் ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஆனால், அந்தத் தேவை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது, அந்த ஒப்பந்தத்தின் அத்தியாவசிய அவசியம் ஏற்பட எந்த அச்சுறுத்தல் காரணமாக அமைந்தது?
இந்த தேவைக்கு காரணம், 2001-இல் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு இந்தியாவில் ஆட்சியில் இருக்கும்போதே, இந்திய விமானப்படையில் போர் விமானங்கள் வாங்க வேண்டிய தேவையை உணர்ந்து அப்போதே அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பேயி ஆட்சி முடிந்து பிறகு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், 2006-இல் அந்த பேச்சுவார்த்தையை அப்போதைய இந்திய அரசுதான் முன்னெடுத்தது. அப்போதில் இருந்தே 42 ஆக இருக்க வேண்டிய 42 ஸ்குவாட்ரன் (விமானப் படையணி) 2013-ஆம் ஆண்டுக்கு உள்ளாக 33 ஆக குறைந்தது. படை பலம் குறைந்து வருவதன் மூலம் விமானங்கள் வாங்க வேண்டிய தேவை ஊர்ஜிதமாகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2006-இல் இருந்து போர் விமானங்கள் வாங்குவது பற்றி பேசப்ட்டது. ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன, அதன் மீது முடிவெடுக்க ஐந்து ஆண்டுகள் தாமதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் பிறகும் ஒரு நிறுவனம் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்படும், பிறகு ஒப்பந்தப்படி தளவாடங்களை வாங்குவதற்கான நிதி சிறிது, சிறிதாக அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும். விமானங்களும் வந்து கொண்டிருக்கும். ஆனால், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரே, பதினெட்டு விமானங்கள் வாங்கப் போகிறோம் என்று தீர்மானம் செய்த பிறகும், மீதமுள்ள 126 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்று முடிவு செய்த பிறகும் ஒரு விதத்திலும் தீர்வு எட்டப்படவில்லை.
டசால்ட், ஹெச்ஏஎல் இடையே 95 சதவீத பேச்சுவார்த்தை நடந்ததாக கூறும் காங்கிரஸ் ஆட்சியில் மீதமுள்ள ஐந்து சதவீத பிரச்னையை முடிக்காமல் இழுத்தடித்து பிறகு, எந்த தீர்வும் எட்டாத நிலையில் அவை கோப்பில் எழுதப்பட்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தம் ஈடேறாமல் போனதற்கு எது காரணம். இந்த பத்து ஆண்டுகால தாமதத்தில் 42 ஆக இருந்த விமானப்படையணிகள், 33 ஆக வந்த பிறகும் அதை ஈடு செய்ய அவசரகால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேறு என்ன காரணம் இருக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய முழக்கமாக மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கைக்கு முரணாக, விமான உற்பத்தித் துறையில் போதிய அனுபவமற்ற ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் டஸ்ஸோ நிறுவனம் உடன்பாடு செய்து கொள்ளும் வேளையில், இந்தியாவின் ஒரு பிரபலமான பொதுத்துறை அமைப்பான ஹெச்ஏஎல்-ஐ விலக்கி வைத்து விட்டு, இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவது சரியானதா?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 126 விமானங்களில் 18 பறக்கும் நிலையிலான விமானங்களை இந்தியாவுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றுதான் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் தயாரிப்பது பற்றி ஹெச்ஏஎல் மற்றும் டஸ்ஸோ இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 18 விமானங்கள் என்பது ஒரு ஸ்குவாட்ரன்.
இதற்கே பத்து ஆண்டுகளை காங்கிரஸ் கூட்டணி அரசு கால விரயம் செய்த நிலையில், தற்போதைய இந்திய அரசு இரண்டு ஸ்குவாட்ரன் விமானத்தை டஸ்ஸோ நிறுவனமும் மீதமுள்ள விமானங்களை இந்தியாவில் அதன் கூட்டு நிறுவனத்துடனும் சேர்ந்து வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. கேந்திர முக்கியத்துவத்தை கருதி தகுதிவாய்ந்த எந்தவொரு நிறுவனமும் ஹெச்ஏஎல் அல்லது வேறு எந்த நிறுவனங்களும் டஸ்ஸோ உடன் பேசலாம், உற்பத்தியில் உதவலாம். அதனால் பிரதமரின் மேக் இன் இந்தியா கொள்கைக்கு விரோதமாக எதையும் இந்திய அரசு செய்து விடவில்லை.
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் போல தற்போதைய ரஃபால் விமான ஒப்பந்த விவகாரம் பேசப்படுவதால் இரண்டும் ஒன்று போல கருதி ஒப்பிடுவதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
இல்லை. அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இரண்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. போஃபர்ஸ் விவகாரத்தில் குட்ரோச்சி என்ற இடைத்தரகர் மூலம்தான் அந்த பேரம் சாத்தியமாக்கப்பட்டது. காங்கிரஸில் முதல் குடும்பத்தில் தொடர்புடையவர் என்ற அளவுக்கு பலருக்கும் தகவல் தெரியும் அளவுக்கு நிலைமை இருந்தது. அவரது கணக்குக்கு வங்கிப்பரிமாற்றம் நடந்தது நிரூபிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ரஃபால் விவகாரத்தில் எவ்வித பணப்பரிவர்த்தனையும் இடைத்தரகர் மூலம் செய்யப்படவில்லை. முற்றிலும் பிரெஞ்சு அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் இது. அதனால் இங்கு ஊழல் இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் கூட ரஃபால் விவகாரம் விரிவாக விசாரிக்கப்படும் நிலையில், இதில் இந்திய அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கவும் பொறுப்புடைமையை சரிபார்க்கவும் எந்தவொரு அமைப்பு தகுதி பெறுகிறது.
நாங்கள் விதிகளின்படியே இதில் செயல்பட்டு வருகிறோம். நீதிமன்றம் கோரிய விளக்கங்களை நாங்கள் விவரித்துள்ளோம். இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரோ வேறு எந்தவொரு அமைப்போ உரிய விளக்கங்களை கோரி ஆவணங்களை அளிக்க உத்தரவிட்டால் அதை நாங்கள் சமர்ப்பிக்கத்தான் போகிறோம். இதில் எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. இதில் ஊழல் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு கூட நாங்கள் பதில் அளித்தோம். ஆனால், கொடுத்த பதிலுக்கு பிறகும் அவர்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு புதிய குற்றச்சாட்டுகளை உண்மை புரியாமல் எழுப்புகிறார்கள்.
ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் டஸ்ஸோ உடன் ஒப்பந்த பங்குததாரராகும் நிலையில், அந்த வாய்ப்பை இழந்த ஹெச்ஏஎல் தகுதியற்றதாக இந்திய அரசு கருதுகிறதா?
முதலில் அந்த விவகாரத்துக்கு உள்ளேயே நாங்கள் செல்ல விரும்பவில்லை. இந்தியாவில் யாருடன் டஸ்ஸோ நிறுவனம் வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்போகிறது, எந்த பொருட்களை அதனுடன் சேர்ந்து வாங்கி ஒப்பந்தத்தை செயல்படுத்தப் போகிறது என்பதெல்லாம் டஸ்ஸோ நிறுவனத்தின் தனிப்பட்ட விவகாரம். தற்போதைய நிலையில், அது பற்றி எல்லாம் நாங்கள் தலையிடப்போவதில்லை. இரு நாட்டு அரசுகளிடையே ஒப்பந்தம் செய்யப்படும் வேளையில், இந்தியாவில் யாருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று டஸ்ஸோ நிறுவனத்தை நாங்கள் நிர்பந்திக்க முடியாது. அது அந்நிறுவனத்தின் வர்த்தக சுதந்திரம். உறுதியளித்தபடியும் விதிகளின்படியும் அந்த நிறுவனம் செயல்படும்வரை எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதை மீறிச் செயல்படும்போது அந்நிறுவனத்தை கேள்வி கேட்க இந்திய அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது. தவறு நடந்தால் அப்போது நாங்கள் தலையிட்டு கேள்வி எழுப்புவோம்.
இலங்கையில் சமீபத்திய வாரங்களாக ஏற்படும் அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் சீனாவின் பங்கு இருக்கலாம் என கருத்து நிலவும் சூழலில், அந்நாட்டுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மகிந்த ராஜபக்ஷ பிரதமராகியிருப்பதை இந்தியாவுக்கான சீனாவின் மறைமுக அச்சுறுத்தலாக பார்க்கிறீர்களா?
இலங்கை அரசியல் நெருக்கடி விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து இப்போதுவரை இந்திய வெளியுறவுத் துறைதான் நிலைமையை கவனித்து வருகிறது. அதுவே பதில் அளித்தும் வருகிறது. அதனால், நான் பதில் அளிப்பது சரியாக இருக்காது. ஆனால், இலங்கையில் தமிழ் மக்களுக்காக பிரதமர் மோடி வீட்டுவசதி திட்டங்கள் நிறைவேற்றவும், யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி மத்திய மாகாணங்களில் டீ எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தமிழ் மக்களுக்காக மீள் கட்டுமைப்பு உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மே 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடனேயே இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய தமிழ் மீனவர்களுக்கு தண்டனை குறைப்பு கிடைத்து உயிருடன் அவர்களை மீட்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த எண்ணத்துடன்தான் இலங்கையுடன் நல்லுறவை இந்தியா பேணி வருகிறது.
தற்போது அந்நாட்டில் புதிதாக நடக்கக் கூடிய விஷயங்கள் குறித்து இந்திய வெளியுறவத் துறை தரப்பில் இருந்து பதில் வரும்.
இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை தாண்டிச் செல்லும் சம்பவங்கள் தற்போதும் தொடர்கதையாகி வருவதால், இரு தரப்பிலும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்ககத் கூடிய கூட்டு செயல் நடவடிக்கை குழுவின் கூட்டத்தை கூட்டி பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா முன்னெடுப்பை தொடங்குமா?
இந்த விவகாரத்தில் பரஸ்பரம் முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் என்றே இந்திய அரசு விரும்புகிறது. தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்த பிறகு நானும் சம்பந்தப்பட்ட மீனவ சமூகத்தினரை சந்தித்துப் பேசினேன். தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை மூலம் பாதுகாப்பு தரப்படும் என்ற உறுதியை இப்போதும் அளிக்கிறேன். இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளின் கூட்டத்தில் எப்போது நான் பேசினாலும், தமிழக கடல் பகுதியில் தமிழ் பேசும் அதிகாரிகளை இயன்றவரை பணியில் ஈடுபடுத்துமாறு நான் வலியுறுத்திக் கூறி வருகிறேன். அதில் எவ்வித பின்வாங்கலுக்கும் இடம் கிடையாது.
திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இல்லாத தற்போதைய தமிழக அரசியலில் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவால் எந்த அளவுக்கு மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று நம்புகிறீர்கள்?
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னேறிக் கொண்டுதான் வருகிறது. ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் நானே சுற்றுப்பயணம் செய்து இந்திய அரசின் அடிப்படை வசதித் திட்டங்கள், காப்பீடு திட்டங்கள், பெண்கள் மற்றும் குடும்ப நல திட்டங்கள், வங்கித் திட்டங்கள் போன்றவற்றை விளக்கி பேசினேன். இந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு பயன் தருபவை என்பதால் அவற்றை நானும் இந்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இணைந்து மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கிறோம். அந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.
தமிழகத்தின் கடந்த நாற்பது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளின் தோள் மீதே தேசிய கட்சிகள் சவாரி செய்து தேர்தலில் வெற்றியை பெறும் சூழல் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக மீதுதான் எதிர்வரும் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி பயணிக்கப் போகிறதா?
இது குறித்து மாநில அளவிலான பாரதிய ஜனதா கட்சிதான் மதிப்பீடு செய்து உரிய பரிந்துரையை செய்ய வேண்டும். சூழலுக்கு ஏற்ப எது நடக்கும் என பார்க்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: