You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தாருக்கு உளவு வேலை: பஹ்ரைன் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் சிறை
பஹ்ரைன் எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் ஷேக் அலி சல்மான், கத்தாருக்கு உளவாளியாக செயல்பட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பஹ்ரைன் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
எதிரி நாட்டுடன் உறவு கொண்டதாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து பஹ்ரைன் உயர் நீதிமன்றம் ஒன்று அவரை விடுதலை செய்திருந்தது. அவரது விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டின் மீது அவருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 2017 முதல் பஹ்ரைன் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகவும், அரபு பிராந்தியத்தில் இரானுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் கூறி, கத்தார் உடனான அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்துக்கொண்டன.
ஷேக் அலி சல்மான் தலைமை வகித்துவரும், தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான அல்-வெகாஃப் இயக்கம், ஹசன் சுல்தான் மற்றும் அலி அல்-அஸ்வத் ஆகிய எதிர்க்கட்சி தலைவர்களுடன் இணைந்து, 2011இல் அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2017இல் கத்தார் அரசுக்கு எதிராக பஹ்ரைன் அரசு நடவடிக்கைகள் எடுத்தபோது, இது தங்கள் தலைவரின் சிறை வாழ்க்கையை நீட்டிக்க அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்று அல்-வெகாஃப் இயக்கம் கூறியிருந்தது.
பஹ்ரைன் நாட்டில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சுன்னி பிரிவினர் ஆட்சி செய்வதை எதிர்த்து நடந்த, மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை பாதுகாப்பு படையினர் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கினர்.
பஹ்ரைனின் அல் கலீஃபா அரச குடும்பத்தினர் இந்தப் போராட்டங்களை ஒடுக்க அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியா உதவின.
"மாற்று கருத்து உடையவர்களை பஹ்ரைன் அரசு தீவிரமாகவும் சட்டவிரோதமாகவும் ஒடுக்க முயலும் முயற்சிகளையே ஷேக் அலி சல்மானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காட்டுகிறது," என மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான இயக்குநர் ஹெபா மொராயஃப் கூறியுள்ளார்.
சல்மான் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான சட்டபூர்வ வாய்ப்புகள் இன்னும் உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :