கேளிக்கைக்காக கஞ்சா பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கியது கனடா

கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகி கனடாவில் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து விற்பனை தொடங்கியுள்ளது.

கனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர்.

உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது.

2001ம் ஆண்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

போதை மருந்தை சாப்பிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுக்க காவல்துறை பிரிவுகள் எந்த வகையில் தயாராக உள்ளன என்பது பற்றி கவலைகள் எழுந்துள்ளன.

புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் 15 மில்லியன் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கான விழிப்புணர்வு பரப்புரைகளும் நடத்தப்பட்டுள்ளன.

சட்டபூர்வமாக விற்கப்படும் கஞ்சாவை வாங்கி 'வரலாறு' படைக்க வேண்டுமென செயின்ட் ஜான்ஸ் நகரை சேர்ந்த இயன் பவர், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே வரிசையில் நின்றார்.

"கனடாவில் போதைக்கு விற்கப்படுவது சட்டபூர்வமாகிய பின்னர் கஞ்சாவை வாங்குகின்ற முதல் நபராக இருக்க வேண்டும் என்பது எனது கனவு. இறுதியில் அதனை வாங்குவதற்கு இங்குள்ளேன்" என்று இயன் பவர் கூறினார்.

போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை குற்றமாக பார்ப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்களாக கனட மாகாணங்களும், மாநகராட்சிகளும் தயார் செய்து வந்தன.

போதைக்கு கஞ்சா எங்கு வாங்க வேண்டும், எங்கு சாப்பிடலாம் என்பதை முடிவு செய்கின்ற பொறுப்பு மாகாணங்களுக்கும், மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனால், நாடு முழுவதும் ஏறக்குறைய கட்டுப்பாடற்ற சட்ட நிலைமையை உருவாகியுள்ளது.

சட்டபூர்வமாக கஞ்சா விற்பனைக்கு கனடா எந்த அளவுக்கு தயார்?

கனடாவில் சட்டபூர்வமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சில முக்கிய பிரச்சனைகள் இன்னும் விடையின்றியே உள்ளன.

கஞ்சா உற்பத்தி மற்றும் அதற்கு உரிமம் வழங்குகின்ற முதல் ஆண்டாக இருப்பதால், கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் தொடர்வதால், பற்றாகுறை ஏற்படலாம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனுடைய சந்தையே இன்னும் குழந்தை பருவம் போல தொடக்க நிலையில்தான் உள்ளது.

கனடாவில் அதிக மக்கள் வாழும் மாகாணமான ஒன்டாரியோ, அடுத்த வசந்த காலத்தில் இருந்து சில்லறை மளிகை கடைகளில் இருந்து கஞ்சாவை வாங்க முடியும். இணையத்தில் பதிவு செய்தும் இதனை வாங்கும் வசதி இருக்கும்.

அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுகின்ற மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதன்கிழமை மட்டும் சட்டபூர்வமான கடை ஒன்று திறந்திருக்கும் என்று தெரிகிறது.

சில்லறை விற்பனை இடங்கள் பரந்த அளவில் உருவாகுவது வரை இந்த சட்டம் முதலில் முன்மொழியப்பட்டபோது தொடங்கி, உருவாகியுள்ள உரிமம் பெறாத கஞ்சா சில்லறை வியாபாரிகள் கடைகளை வைத்திருப்பர்.

உரிமம் பெறாத கஞ்சா சில்லறை விற்பனை கடைகளை தடுப்பது தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்டும் காணாமல் இருப்பார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

கஞ்சா விற்பனையை கனடா சட்டபூர்வமாக்கு ஏன்?

கஞ்சா விற்பனையை அனுமதிக்கும் சட்டம் கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ 2015ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

உலகிலேயே கஞ்சாவை அதிகமாக பயன்படுத்துவதில் கனடர்கள் இருப்பதால், சுமார் ஒரு நூற்றாண்டு பழமையான போதை மருந்து பயன்படுத்துவதை குற்றமாக்கும் சட்டம் செயல்திறனை இழந்துவிட்டது என்று ட்ரூடோ கூறினார்.

இந்த புதிய சட்டம் வயதுக்கு வராதோரிடம் போதை மருந்து கிடைப்பதை தடுத்து, குற்றவாளிகள் இதனால் லாபமடையாமல் இருக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1923ம் ஆண்டு போதை மருந்து பயன்பாடு குற்றமென கனடாவில் சட்டம் இயேற்றப்பட்டது.

பிற நாடுகளில் நிலைமை என்ன?.

2013ம் ஆண்டு கஞ்சாவை பயன்படுத்துவதை உகாண்டா சட்டபூர்வமாக்கி, உலகிலேயே சட்டமாக்கிய முதல் நாடு என்ற பெருமை பெற்றது.

அமெரிக்காவின் சில மாகாணங்களும் இந்த தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்துள்ளன.

மருத்துவ சிகிச்சைக்கு போதை மருந்தை பயன்படுத்துவது ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் அடைந்து வருகின்றன. போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து மருத்துவ சிகிச்சைக்கு போதை மருந்து பயன்படுத்தப்படுவதை அனுமதித்துள்ளன.

தனிப்பட்ட இடங்களில் கஞ்சாவை வயதுக்கு வந்தோர் பயன்படுத்துவதை அனுமதித்து சட்டமாக்கியுள்ள தென்னாப்பிரிக்காவின் உயரிய நீதிமன்றம், போதை மருந்து விற்பனையை குற்றமென நடைமுறைப்படுத்தி வருகிறது.

லெசோதோவுக்கு அடுத்ததாக, ஜிம்பாப்வே கடந்த ஏப்ரல் மாதம் அனுமதித்து, ஆப்பிரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கு போதை மருந்து பயன்பாட்டை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் 9 மாநிலங்கள் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமென பல மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

கஞ்சா பற்றி புதிய விதிகள்

கஞ்சா எண்ணெய், விதைகள், தாவரம் மற்றும் உலர்ந்த கஞ்சா ஆகியவற்றை வயதுக்கு வந்தோர் மட்டுமே வாங்கலாம். பொதுவாக 30 கிராம் (ஒரு அவுன்ஸ்) உலர் கஞ்சா அல்லது அதற்கு சமமான அளவை வைத்து கொள்ளலாம்.

சாப்பிடக்கூடிய அல்லது கஞ்சா சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் உடனடியாக வாங்குவதற்கு கிடைக்காது. இந்த மசோதா நடைமுறையாகி ஓராண்டுக்குள் அவை சந்தையில் கிடைக்கும்.

இந்த உணவு வகைகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க இந்த இடைவெளி உதவும்.

30 கிராமுக்கு அதிகமான கஞ்சாவை பொதுவெளியில் வைத்திருந்தாலோ, வீட்டுக்கு 4 கஞ்சா செடிகளுக்கு மேலாக வளர்த்தாலோ, உரிமம் பெறாத விற்பனையாளரிடம் இருந்து கஞ்சாவை வாங்குவது அனைத்தும் சட்டப்பூர்வமற்ற நடைமுறையாக இருக்கும்.

இதற்கு அபராதம் கடுமையாக இருக்கும். வயதுக்கு வராதோருக்கு கஞ்சாவை விற்பனை செய்தால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம்.

சாராயத்தை வயதுக்கு வராதோருக்கு விற்பனை செய்வோருக்கு வழங்கப்படும் தண்டனையை விட போதை மருந்து விற்பனையாளருக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் கடுமையாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கவலைகள்

கஞ்சா உற்பத்தியாளர்கள் மற்றும் வரி வருவாய்க்காக தேசிய அளவில் கட்டுப்பாடில்லாத இந்த பரிசோதனையை, கனடர்களின் சுகாதாரத்திற்கு எதிரானதாக இந்த சட்டம் ஆக்கியுள்ளதாக கனடிய மருத்துவ கூட்டமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்னும் சில சட்டபூர்வ அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளன.

போதை மருந்து சாப்பிட்டு வாகனம் ஓட்டுவதற்கு புதிய குற்ற விதிகளை கனடா இயேற்றியுள்ளது.

இதனை கண்காணிக்கும் தொழில்நுட்பம், போதைப் பொருட்களைக் கையாளும் திறனுடைய வழக்குகள் நீதிமன்றங்களில் குவிவது ஆகியவை பற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: