You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?
- எழுதியவர், சித்ரா சுகவனம்,
- பதவி, பிபிசி தமிழுக்காக, கனடாவிலிருந்து
கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.
இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்றி கனடா வாழ் தமிழ் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
80 வயதான பொன்னம்மாள், "அரசே இப்படி செய்கிறார்கள், என்ன சொல்வது? முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல. மேலும், அந்த நாற்றத்தைத் தாங்க முடியாது." என்கிறார்
இவரது மகள் ப்ரீத்தி கூறும்போது. "என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம். குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன, " என்றார்.
"சட்டரீதியாக இதனை அனுமதித்தால் கலப்படம் இல்லாத தரமான பொருள் கிடைக்கும். கஞ்சா பிடிப்பவர்கள் எப்படி இருந்தாலும் அதை தேடி பிடிப்பார்கள். குறைந்தபட்சம் தரமில்லாத பொருளை உபயோகப்படுத்த மாட்டார்கள்," என்றும் அவர் கூறினார்.
வாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறும்போது, "சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று. அதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா? உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம். இளைஞர்களைப் போதைக்கு அடிமை ஆக்கிவிடும்'' என்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்