You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு
தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு.
காவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு இன்னும் உறுப்பினரை நியமிக்காததால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 12ஆம் தேதிக்குள் உறுப்பினரை நியமிக்குமாறு கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன்: அணிவரிசையில் தலைப்பாகை அணிந்த சிப்பாய்
பிரிட்டன் ராணி எலிசபத்தின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் சிப்பாய் ஒருவர் அணிவரிசை நடத்தும்போது தலைப்பாகை அணிந்திருந்தார். மற்ற சிப்பாய்கள் கரடியின் முடியால் ஆன தொப்பிகளை அணிந்திருந்தபோது, இவர் மட்டும் தலைப்பாகை அணிந்திருந்தார்.
இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த சரண்ப்ரீத் சிங் லால், இது "வரலாற்றில் நிகழ்ந்த மாற்றமாக கருதப்படும்" என்று தாம் நம்புவதாக தெரிவித்தார். பிரிட்டன் வரலாற்றில் இவ்வாறான அணிவரிசை நடத்தப்படும் போது, தலைப்பாகை அணிந்திருந்த முதல் காவலர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் கிளம்பினார் டிரம்ப்
வரும் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரின் பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக டிரம்ப் கிங்கப்பூர் கிளம்பியுள்ளார். இந்த சந்திப்பை ''அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு முறை வாய்ப்பு'' என டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், இந்த சந்திப்புக்கான நோக்கம் ''அமைதி'' எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாற்காலியில் அமர்ந்த தலித்துகள் மீது தாக்குதல்
குஜராத் மாநிலம் வல்தேரா என்ற கிராமத்தில் தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாற்காலியில் அமர்ந்ததால் உயர் சாதி மக்கள் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பல்லவி தெரிவித்தார். அவருக்கு உதவ வந்த அவரது கணவர் மற்றும் மகனும் தாக்கப்பட்டுள்ளனர்.
ரமலானை ஒட்டி சண்டை நிறுத்தம்: தாலிபான்கள்
ரமலான் பண்டிகை இந்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு படைகள் உடனான சண்டையை மூன்று நாட்கள் நிறுத்து உள்ளதாகத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரான சண்டையை தவிர, மற்ற தீவிர நடவடிக்கைகளைப் பண்டிகை காலத்தின் போது நிறுத்திவைப்பதாகத் தாலிபான்கள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்