You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பத்தாயிரம் பேர் வசிக்கும் உலகின் சிறிய தீவின் துயர்மிகு கதை
நவுரா - இது உலகின் மிக சிறிய தீவு நாடு. முன்பொரு சமயத்தில் இந்நாடு பிரிட்டனின் காலனியாக இருந்தது. இந்நாட்டை பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி இந்நாட்டினை ’இனிமையான நாடு’ என்று வர்ணித்தார். அப்படிதான் அந்த நாடு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கதைகள்தான் நிறைந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள், நவுராவில் ஆஸ்திரேலிய அரசினால் நடத்தப்படும் தடுப்பு காவல் முகாம்களில்தான் அடைக்கப்படுகிறார்கள்.
வருவாய்
பசிபிக் பெருங்கடலில் வடகிழக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இத்தேசத்தில் பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்படும் இந்த தடுப்பு காவல் முகாம்கள்தான் இந்த சிறு தேசத்திற்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. வருவாய் வழியாகவும் இருக்கிறது.
இந்த சிறிய நாட்டில் பாஸ்பேட் சுரங்கங்கள்தான் மற்றொரு வருவாய் வளமாக இருக்கிறது. ஆனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதுவும் தீர்ந்து போய்விடும் என கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற நாடுகளின் உதவியைதான் இந்நாடு நம்பி இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் அகதிகள் சந்தித்து வரும் பிரச்சனை சர்வதேச அளவில் விவாத பொருளாகி உள்ளது.
தற்கொலை எண்ணம்
இங்கு தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு கூட தற்கொலை எண்ணம் அதிகமாக எழுவதாக கூறுகிறார்கள் இந்த முகாம்களில் உள்ளவர்களும், உளவியலாளர்களும்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர், "இந்த முகாம்களில் உள்ள எட்டு வயது, பத்து வயது சிறுவர்களிடம் கூட தற்கொலை நடத்தையை பார்க்கிறோம்." என்கிறார்.
இவர் அந்த முகாம்களில் உள்ளவர்களிடையே பணிபுரிந்து வருகிறார்.
இவர் மட்டும் அல்ல முகாம்களில் உள்ள மக்களை கவனித்து வரும் பலரும் இதனையே சொல்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முற்றும் சிதைந்து இருக்கிறது. இந்த முகாம்களில் உள்ள பலர் மரணித்துவிட்டனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக போகிறது என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்கின்றனர்.
தஞ்சம் கோருவோர் வள மையத்தை சேர்ந்த நடாஷா ப்ளச்சர் முகாம்களில் உள்ளவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் குறித்த தகவலை பகிர மறுத்துவிட்டார்.
ஆனால் பதினைந்து வயதுடைய குழந்தைகள் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்து வருவதாகவும், தங்களை தாங்களே வருத்தி வருவதாகவும் கூறுகிறார்.
இந்த பிரச்சனை உச்சத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
நலன் முக்கியம்
இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வரும் மனித உரிமை கூட்டுக் குழு ஒன்று, ஆஸ்திரேலேய அரசாங்கம் இந்த முகாமில் உள்ள 110 தஞ்சம் கோருவரின் குழந்தைகளை வேறு எங்காவது குடியேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது.
நவுராவில் உள்ள இந்த தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதிகள் இருந்தாலும், போதுமான அளவில் இல்லை என்கிறார்கள்.
யார் உடல்நிலையாவது மோசமாக பாதிக்கப்பட்டால், நவுரா அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனை எடுத்து சென்று வெளிநாடுகளுக்கு மருத்துவ வசதிகளுக்காக அனுப்ப வேண்டும்.
மோசமான உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தைவான், பப்புவா நியூகினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. இந்த தீவில் உள்ள முகாம்களில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத்திற்காக பலப ணிகளை செய்து வரும் ஜெனிஃபர் கன்ஸ், அந்த குழந்தைகள் ஆஸ்திரேலிய பகுதியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது என்கிறார்.
இந்த மக்களின் நலனுக்காக ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடி வருகினறனர். காத்திரமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- வாக்காளர் பட்டியலில் பேரை சேர்க்க 3 நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்கள்
- தாமதமான விசாவால் தமிழக வீராங்கனைக்கு நழுவிய வாய்ப்பு
- ரஷ்யா: சோச்சியில் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்த விமானம்
- "நீங்கள் ஆணா? பெண்ணா?” - விரும்பிவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி
- பணமதிப்பு நீக்கம்: சாமானிய மனிதன் பெற்ற பலன் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்