You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி
இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி
"தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். 5-ந்தேதி நடக்கும் அமைதி பேரணி தங்கள் பலத்தை காட்டும் பேரணி அல்ல. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாகவே அது இருக்கும்" என்று ஹலோ எப்.எம். பேட்டி ஒன்றில் துரை தயாநிதி அழகிரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
"தி.மு.க.வில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி அழகிரி தனது குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தவில்லையா? என கேட்டபோது, கருணாநிதி இருந்தபோது அவரிடம் மட்டும் பேசியதாகவும், மற்ற யாரிடமும் தனது தந்தை தொடர்பு கொண்டதில்லை எனவும் துரை தயாநிதி கூறினார்.
தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து அதனை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதே தங்களது ஆசை என கூறிய அவர் இதற்கு சித்தப்பாவிடம்(மு.க.ஸ்டாலின்) இருந்து சாதகமான பதில் வரும் என தெரிவித்தார்" என்கிறது தினத்தந்தி.
அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் என அவர் கூறியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி: 'நடிகர் சிலம்பரசனை எச்சரித்த நீதிமன்றம்'
'அரசன்' என்ற திரைப்படத்தில் நடிக்க முன்பணமாகப் பெற்ற 50 லட்ச ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
கடந்த 2013-ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்ற தலைப்பில் படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்தப் படத்துக்காக சிலம்பரசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, முன் பணமாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
ஆனால், அந்தப் படத்தில் சிலம்பரசன் நடிக்காத காரணத்தால் முன் பணமாக கொடுத்த தொகையைத் திரும்ப தரக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
'பாலில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகள் கொலை'
சென்னை அருகே குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் தாயை போலீஸார் தேடி வருகின்றனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விஜய் (30), சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வங்கியில் வேலைப்பளு அதிகமாக இருந்ததினால், வங்கியிலேயே அன்று இரவு விஜய் தங்கினார். சனிக்கிழமை அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு வீட்டின் படுக்கை அறையில் குழந்தைகள் அஜய்யும், காருனிகாவும் வாயில் நுரைத் தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து விஜய் அதிர்ச்சியடைந்தார்.
அவரது மனைவி அபிராமி அங்கு இல்லாதது அவருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியது. தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு குழந்தைகளின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இரு குழந்தைகளும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கணவர்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததும், மேலும் அபிராமி அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் நெருக்கமாக இருந்ததும் போலீஸாருக்கு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், அபிராமியே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அந்த நபருடன் தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமறைவாக இருக்கும் அபிராமியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்." என்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: '8.2 சதவீத வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமே சாத்தியம்'
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதத்தை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்கள் நிலவிய போதிலும் புதிய இந்தியா இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்கள் மற்றும் நிதி சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இப்போதுதான் புதிய மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சியை கண்டு வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2011-12-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் 2018-19-ம் நிதி ஆண்டின் பொருள்கள் விலை விவரத்துடன் ஒப்பிட்டு 8.2 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.6 சதவீதமாக இருந்தது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:"ஒரே வாரத்தில் இந்தி மொழி கற்றுக் கொண்ட யானைகள்"
கர்நாடக காடுகளில் சுற்றித் திரிந்த 11 யானைகள் உத்தர பிரதேசத்திசல் உள்ள துத்வா தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதற்காக ஒரே வாரத்தில் அந்த யானைகள் இந்தி மொழி கற்று கொண்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இளம் யானைகள் சற்று எளிதாக புதிய மொழியை கற்றுக் கொண்டதாகவும், மற்ற யானைகளுக்கு அது சற்று கடினமாகவும் இருந்தது. இதற்காக கர்நாடகாவில் இருந்து வந்த பாகன்கள் அந்தா யானைகளுடன் தங்கி கனடா மொழியில் இருந்து வார்த்தைகளை இந்திக்கு மொழி பெயர்த்து உதவியதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்