பணமதிப்பு நீக்கம்: சாமானிய மனிதன் உண்மையில் பெற்ற பலன் என்ன?

    • எழுதியவர், மு.நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

பொருளாதார வீழ்ச்சியை வேகப்படுத்தியதை தவிர பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என்கிறார் பொருளாதரா பேராசிரியர் க.ஜோதி சிவஞானம்.

பணமதிப்பு நீக்கத்தின் போது நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 15.41 லட்சம் கோடியில் 99.3 சதவீதம் அதாவது ரூ.15.31 லட்சம் கோடி பணம் வங்கி முறைக்குத் திரும்ப வந்துவிட்டன என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்கத்தின் மூலமாக ஏற்பட்ட பொருளாதார தாக்கம் குறித்து அறிய பொருளாதரா பேராசிரியர் க.ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

ஜோதி சிவஞானம் பணமத்திப்பு நீக்கம் அறிவிப்பு வந்தபோதே, இந்த நடவடிக்கையை "தரைவிரிப்பு குண்டு வீச்சு" என்று வர்ணித்து இருந்தார்.

அப்போது அவர் எழுதிய கட்டுரையில், "தொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு "துல்லியமான தாக்குதல்" (Surgical Strike) என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்துத்தரப்பு மக்களையும் துறைகளையும் தாக்கியுள்ள, மேலும் தாக்கிவிருக்கின்ற ஒரு "தரைவிரிப்பு குண்டு வீச்சு" (Carpet Bombing) என்றுதான் வர்ணிக்கவேண்டியுள்ளது." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதனை குறிப்பிட்டு இப்போது பேசிய சிவஞானம், "நான் மட்டுமல்ல, பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் பணமதிப்புநீக்க நடவடிக்கையால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று முன்பே சுட்டிக்காட்டி இருந்தோம்"என்கிறார்.

பொருளாதாரம் அல்ல, அரசியல் நடவடிக்கை

"உண்மையில் இது பொருளாதார நடவடிக்கை அல்ல. முற்றும் முழுவதுமான அரசியல் நடவடிக்கை" என்கிறார் ஜோதி சிவஞானம்.

அவர், "பணமதிப்பு நீக்கத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையையும், பாரதிய ஜனதா கட்சி எதனை முன் வைத்து ஆட்சியை பிடித்தது என்பதையும் பின்னோக்கி பார்க்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த தேர்தலில் 'பொருளாதாரம்' என்ற பதத்தைதான் அதிகம் பயன்படுத்தியது பா.ஜ.அ/ காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சிதைந்திவிட்டது, உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

"கறுப்புப் பணம், ஊழல் என பொருளாதாரத்தை சுற்றியே பிரசாரத்தை முன்னெடுத்தது பா.ஜ.க. ஆனால், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தப்பின்னும் பொருளாதாரத்தை முன்னெடுக்க காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மக்களை திசைதிருப்பவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் இறங்கு முகத்தில் இருந்த பொருளாதாரத்தை இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேலும் வேகப்படுத்தியது" என்கிறார்.

என்.ஜி.ஓ அரசியல்

ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவோர் அனைவரையும் தேச துரோகி எனவும், என்.ஜி.ஓக்களிடம் பணம் பெறுபவர்கள் எனவும் குற்றஞ்சாட்டி வருகிறது ஆளும் பா.ஜ.க அரசும், தீவிர வலதுசாரி அமைப்புகளும். இப்படியான சூழ்நிலையில், தேச பொருளாதாரத்தை சிதைத்தது என்.ஜி.ஒவிடம் ஆலோனை பெற்ற பா.ஜ.கதான்.

சிவஞானம், "ஒரு மாபெரும் பொருளாதார நடவடிக்கை அரசு எடுக்க வேண்டுமானால், யாரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்? பொருளாதார வல்லுநர்களிடமிருந்துதானே? ஆனால், பணமதிப்பு நீக்கத்திற்காக இவர்கள் ஆலோசனை பெற்றது ஒரு 'என்.ஜி.ஓ'விடமிருந்து... இது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

மோதியின் உரையும், கறுப்புப் பணமும்

"பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த அந்த நவம்பர் 8 ஆம் தேதி உரையின் போது, மோதி ஏறத்தாழ 18 முறை 'கறுப்புப் பணம்' என்ற பதத்தை பயன்படுத்தினார். பின் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலும் 'கறுப்பு பண' ஒழிப்புகாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என்று கூறி இருந்தார். இப்போது 99.3 % பணம் மீண்டும் வந்துவிட்டது. அப்படியானால் கறுப்புப் பணமே புழக்கத்தில் இல்லை. முற்றாக ஒழிந்துவிட்டது என்று அர்த்தமா? அப்படியெல்லாம் இல்லை. கறுப்புப் பணம் அப்படியே இருக்கிறது. அதனை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் தவறு" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜோதி சிவஞானம்.

'மாற்றப்பட்ட கணக்கிடும் முறை'

"காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம், உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொண்ட நடவடிக்கை என்ன தெரியுமா? ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கணக்கிடும் முறையை மாற்றியதுதான். கணக்கிடும் முறையை மாற்றி போலியாக வளர்ச்சி என்று காட்டினார்கள்.

ஓட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்நடவடிக்கை காரணமாக 7.9 விகிதத்தில் இருந்து (Q2 2016) 5.7 விகிதத்திற்கு (Q2 2017) குறைந்துள்ளது. இதையே பழையமுறையில் கணக்கிட்டால் Q2 2017ன் வளர்ச்சி விகிதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே." என்கிறார்.

'டிஜிட்டல் பரிவர்த்தனை'

"பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாமான்யனுக்கு விளைந்த நன்மை என்ன? என்ற கேள்விக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை என்கிறார்கள். உண்மையில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமே இதன் மூலமாக லாபம் பெற்றன. நேரடியாக பரிவர்த்தனை நடக்கும் போது 100 ரூபாயின் மதிப்பு நூறு ரூபாயாகதான் இருக்கிறது. ஆனால், டிஜிட்டல் பர்வர்த்தனையில் அந்த நிறுவனங்கள் சேவை கட்டணம் பெறுகின்றன. அதனால், 100 ரூபாயின் மதிப்பு சேவை கட்டணத்திற்கு ஏற்றவாறு குறைகிறது. சாமான்யனுக்கு இதிலும் இழப்புதான்" என்கிறார்.

அனைத்தையும் ஆராய்ந்தால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சாமான்ய மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளானதும், இறந்ததும்தான் மிச்சம் என்கிறார் ஜோதி சிவஞானம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :