You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 3 நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்கள் - சுவாரஸ்ய சம்பவம்
கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
வரிசையில் மூன்று நாட்கள்
அடுத்த அண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யும் பணி ஆஃப்ரிக்கா நாடான நைஜீரியாவில் நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 20 கோடி மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில், எட்டுக் கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர் என சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்காளர் பட்டியலில் பேரை சேர்க்கும் ஏற்பாடு மிகவும் மெதுவாக மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக கூறுகிறார்கள் மக்கள். சிலர் மூன்று நாட்கள் வரை வரிசையில் நின்றதாக கூறுகிறார்கள்.
தேர்தலில் நிற்க முடியாது
ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றதன் காரணமாக பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வரும் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் வழக்குகளை விசாரிக்கும் தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஆறு நீதிபதிகள் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தீர்ப்பளித்தனர்.
லிபியா கலவரம்
லிபிய தலைநகர் திரிபோலியில் கலவரம் வெடித்ததை அடுத்து அமைதி பேணுமாறு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரி உள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "சட்டப்பூர்வமான அரசை பலவீனப்படுத்துவதையும், தேர்தல் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறி உள்ளனர்.
வெளிப்படையான தாக்குதல்
ஐ.நா பாலத்தீன அகதிகள் முகாம்களுக்கு அளித்து வந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியது அப்பட்டமான தாக்குதல் என பாலத்தீன அதிகாரிகள் கூறி உள்ளனர். ஐ.நா நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு அமெரிக்காதான் முக்கியமான புரவலர். அந்த அமைப்பு, 'திரும்ப சரிசெய்யமுடியாத தவறை செய்துவிட்டதாக' கூறி அமெரிக்கா நிதியை நிறுத்தி உள்ளது. அப்பட்டமான தாக்குதல் இது என பாலத்தீனம் கூறி உள்ள நிலையில், இதனை வரவேற்றுள்ளது இஸ்ரேல்.
பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா
ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, பாகிஸ்தான் ஏமாற்றுவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தொகையை மற்ற அவசர விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதற்கு செலவிடப் போவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஹக்கானி மற்றும் ஆஃப்கான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறியதாக பாகிஸ்தானை அமெரிக்க அரசுத்துறை விமர்சித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்