கருணாநிதி: "ஆன்மாவை இழந்த தமிழகம்"
- எழுதியவர், மணி சங்கர் ஐயர்
- பதவி, முன்னாள் மத்திய அமைச்சர்
கலைஞரைப் பறித்த தமிழகம், அதன் ஆன்மாவை இழந்தது போல தோன்றுகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, குறைந்தபட்சம் எழுபது ஆண்டுகள் என்று கூட கூறலாம், தமிழக மக்களால் மிகவும் ஆழமாக நேசிக்கப்பட்ட தலைவராக விளங்கினார் கலைஞர் கருணாநிதி.
நிச்சயமாக, திராவிட இயக்கத்தைத் தொடங்கியதற்காக தந்தை பெரியாருக்கும், அதற்கு அரசியல் வடிவம் மற்றும் பொருளாக்கத்தை வழங்கிய "அண்ணா"-வுக்கும் கூட அந்தப் பெருமை சேரும். ஆனால், முதல்வரான இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அண்ணா மறைந்த பிறகு, திராவிட சித்தாந்தத்தை அது தொடங்கிய நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாங்கிப்பிடித்தவர் கருணாநிதி.
தான் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் என்பதையும் கடந்து அல்லது, வார்த்தைகளால் ஜாலம் செய்யக் கூடியவர் என்பதையும் கிட்டத்தட்ட தமது தினசரி எழுத்துகள், புத்தகங்கள், கவிதைகள் மூலம் அவர் நிரூபித்து வந்தார். ஏராளமான மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை வசனங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு சகாப்த நாயகனுக்கான தகுதியைப் பெற்றுத் தந்தது.
அதை விட முக்கியமாக, மேடை சொல்லாடல்களை, விரிவான திட்டங்களாக மாற்றக் கூடிய அசாதாரண ஆற்றலைப் பெற்று, மனசாட்சிப்படி அவை அமல்படுத்தப்படுவதையும் கருணாநிதி உறுதிப்படுத்தினார். இந்த குணாதிசயத்தால் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் கூட்டத்தை ஈர்க்க முடிந்தும் சொல்வதைச் செயல்படுத்த களத்தில் முடியாமல் தோற்ற மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பித்தவர் கருணாநிதி.

பட மூலாதாரம், Getty Images
ஐந்து முறை முதலாவராக இருந்த கருணாநிதி, அரசியல் மேடையில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டை வரை திராவிட நோக்கத்துக்காக சிறந்த தலைவர்களை அணி திரட்டி, தமது செயல் திறனால் பரிணமிக்க முடியும் என்பதை காண்பித்தார். அந்த தலைவர்கள் வெவ்வேறு ஜாதி மற்றும் வகுப்புகளை சார்ந்தபோதும், அந்தத் தடைகளை அவரால் தகர்த்தெறிந்தார்.
அவர்கள் மீது கருணாநிதி காட்டிய மரியாதை மற்றும் அன்பால் ஈர்க்கப்பட்ட உயர் வகுப்பு பிரமுகர்கள், தமிழகம் மட்டுமின்றி இந்த நாடு அதுவரை பார்த்திராத மிகப்பெரிய சமூக புரட்சிக்காக அவருடன் இணைந்தார்கள்.
சரியாக நிதி ஒதுக்கப்பட்ட சமூக நீதி திட்டங்களுக்கு பொருளாதார வளம் அவசியம் என்று கூறி வந்த பொருளாதார வல்லுநர்கள் கருதி வந்த தத்துவத்தை கருணாநிதியும் திராவிட இயக்கமும் தங்கள் தலையாக கடமையாகக் கருதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தில் அனைத்து தரப்பினரையும் பங்கெடுக்கச் செய்தார்கள். அதன் மூலம், நிலமற்ற தொழிலாளர்களை பணக்கார தொழிலதிபர்களாக வழிவகுத்தனர்.
எவ்வித வன்முறையோ, துப்பாக்கி சூடோ, கொலை சம்பவங்களோ நிகழாமல் எவ்வித எதிர்ப்பின்றி முழுவதும் அமைதியாக அந்த புரட்சி நடந்தது. மேலும், அது தார்மீக சட்டப்பூர்வ மற்றும் திடீரென்று நிறைவேற்றப்பட்ட வியத்தகு நடவடிக்கைக்கு ஜனநாயக வாக்காளர் அரசியலைப் பயன்படுத்தி நடந்த ஜனநாயக சமூக புரட்சியாக அது அமைந்தது.

திராவிட இயக்கத்தின்கீழ் தமிழகத்தில் மட்டுமின்றி, குறிப்பாக தேசிய அளவில் கருணாநிதியின் ஆட்சி, ஊட்டச்சத்து, பள்ளி மதிய உணவு, சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் போட்டி போடும் வகையில் இருந்தது. இதேவேளை, நெல் சாகுபடியில் பசுமை புரட்சி செய்து முன்னோடி மாநிலமாக விளங்கிய தமிழகத்தை இந்த முயற்சிகள், தீவிர தொழிலகமயமாக்கலுக்கு அழைத்துச் சென்றன.
கொள்கை அளவில் பொதுத்துறை அல்லது தனியார்-பொதுத்துறை கூட்டு மூலம்தான் தொழில்மயமாக்கல் சாத்தியமாகும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. கனரக தொழிற்சாலை மட்டுமின்றி சிறிய, நடுத்தர மற்றும் சின்னஞ்சிறு தொழிற்சாலைகள், குறிப்பாக, கைத்தறி மற்றும் கைவினை போன்றவை கிராம நகர்ப்புறங்களில் தோன்ற ஊக்குவிக்கப்பட்டன. அதன் விளைவாக, அங்கு வேலைவாய்ப்புகளும் பெருகின.
தமிழ்நாட்டில் பிராமணிய போக்கை மாற்றியமைக்கவும், பல நூற்றாண்டு காலத்துக்கு தமிழகத்தில் அந்த சமூகம் செலுத்திய ஆதிக்கத்தை வீழ்த்தியது போன்ற சாதனைகளை கருணாநிதியை விட வேறு யாரும் அதிகமாக செய்திருக்க முடியாது. மூடநம்பிக்கை, இறந்தவருக்கு செய்யும் சடங்குகள் என சுயமரியாதை இயக்கம் தவிர்த்த பல விவகாரங்களும் மேல் மட்டத்தில் இருந்து பரவலாக எதிர்க்கப்பட்டன.
இதேவேளை, தமிழ் கோயில்களில் தமிழ் இலக்கியம், தமிழ் மொழி அர்ச்சனை போன்றவை சமஸ்கிருத மொழிக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் தமிழ் கலாசார பெருமைகளை உணர்த்தவும், தமிழராக இருப்பதால் பெருமை கொள்வதையும் இந்த முயற்சிகள் சாத்தியமாக்கின.
ஆரிய இனக்குழுக்களிடம் தமது அடையாளத்தை இழந்து விடும் அபாயத்தில் இருந்து பழங்கால நாகரிகத்தை பாதுகாத்து தமிழுக்கு இந்த நடவடிக்கைகளை, புத்துயிரூட்டின.
இந்த நிலையில் கூட்டாட்சி தத்துவதைத் வலியுறுத்திய அதேசமயம், குறைந்தபட்சம் 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகாவது, தேசிய ஒற்றுமை சாத்தியமாக வேண்டும் என்றார். தமிழ் உரிமைகளுக்காக போராடிய வெறும் கடுமையான போராளியாக மட்டுமின்றி, சிறந்த இந்திய தேசியவாதியாகவும், சிறந்த இந்திய தேசப்பற்றாளராகவும் விளங்கினார்.
மரணத்தின் கொடூரமான கரங்கள் நம்மிடம் இருந்த அவரை பறித்துச் சென்று விட்டதால் இந்தியா ஏழ்மை நிலைக்கு சென்று விட்டது. எனவே, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவர் காட்டிய வழியில் அவரது பயணத்தை முன்னெடுத்துச் செல்வதே, தமிழர்கள் அவறுக்கு ஆற்றும் உயரிய கடமையாக இருக்கும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













