"என்னால் சௌதி அரேபியாவில் கார் ஓட்டுவதை நம்ப முடியவில்லை"

பெண்கள் வாகனம் இயக்குவதற்கு சௌதி அரேபியாவில் பல தசாப்தமாக நீடித்து வந்த தடை இரு தினங்களுக்கு முன் விலக்கப்பட்டுள்ள நிலையில், ஜெட்டாவை சேர்ந்த பேறுகால செவிலியரான ரோவா அல்டாவெலி முதல் முறையாக வேலைக்கு காரை ஓட்டிக்கொண்டு சென்றார். இதோ அவரது கதை.
வழக்கத்திற்கு மாறாக இன்றைக்கு நான் முன்னதாகவே எழுந்துவிட்டேன். நான் இன்றைய நாளுக்காக மிகவும் உற்சாகமாக காத்திருந்தால் என்னால் தூங்க முடியவில்லை. ஏனெனில், முதல் முறையாக எனது அலுவலகத்துக்கு காரின் பின்புறத்தில் உட்காராமல், நானே ஓட்டிக்கொண்டு செல்லவுள்ளேன். நான் ஜெட்டாவில் கார் இயக்கப்போகிறேன் என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு பல்லாண்டுகளாக நீடித்து வந்த தடை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தடை நீக்கப்பட்டவுடன் பெண்கள் சாலையில் வாகனம் இயக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பதற்காக நான் இரவு முழுவதும் சமூக வலைதளங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
சௌதியில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முதல் நாளன்று சாலைகள் அமைதியாகவே காணப்பட்டன. ஆர்வத்துடன் முதல் முறையாக வாகனம் ஓட்டுவதற்கு காத்திருந்தவர்களுக்கு இது நல்லதாகிப்போனது. சில யோசனைகள் பெறுவதற்காகவும், தார்மீக ஆதரவுக்காகவும் என் தந்தையுடன் சேர்ந்து காரில் கிளம்பினேன்.
காரில் சென்றுக்கொண்டிருக்கும்போது சாலையோரத்தில் போலீஸ்காரரைப் பார்க்க நேர்ந்தது; ஆனால், என்னிடம் ஓட்டுநர் உரிமம் இருந்ததால், நான் சட்டப்படியே ஓட்டிக்கொண்டிருந்தேன். செல்லும் வழியில் காபி குடிப்பதற்காக பயண வழிக் கடையொன்றில் வாகனத்தை நிறுத்தினேன். கடைக்காரர் காபி கொடுத்த முதல் பெண் வாகன ஓட்டுநர் நான்தான்.
நான் டிப்ளமோ படிப்பதற்காக பஹ்ரைன் சென்றிருந்தபோது அங்கு வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளது. என்னிடம் 2005ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர் உரிமம் உள்ளது. சுற்றுலாவுக்காக அமெரிக்கா, போர்ச்சுகல் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும்போது என்னிடம் சர்வதேச ஓட்டுநர் உரிமமும் இருந்தது.
எனது பஹ்ரைன் உரிமத்தை இங்கே மாற்றிக்கொள்ள முடிந்தது. ஆனால், ஓட்டுநர் சோதனைக்கு நேரம் பதிவு செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில், ஜூலைக்கு முந்தைய அனைத்து நாட்களுக்கும் ஏற்கனவே பதிவு முடிந்திருந்தது. நல்ல வேலையாக, சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது சகோதரிக்கும் நேரம் கிடைத்ததால், உடனடியாக சென்று முதல் வாய்ப்பிலேயே ஓட்டுநர் உரிமத்தை பெற்றோம்.
தடை நீக்கப்பட்டவுடனேயே வாகனம் ஓட்டலாம் என்பதால் என்னையும், எனது சகோதரியையும் ஓட்டுநர் உரிமம் பெறும்படி என் தந்தையும், சகோதரரும்
நான் பேறுகால செவிலியராக பணிபுரிகிறேன். இங்கிலாந்தில் பேறுகால மருத்துவப் பணியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதற்கு ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதற்கு ஒரு பேறுகால செவிலியர் வாகனத்தை இயக்க வேண்டுமென்பது ஐரோப்பிய மற்றும் மற்ற வளர்ந்த நாடுகளில் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பெண்கள் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சௌதி அரேபியாவில் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று நம்புகிறேன். பேறுகால செவிலியரின் உதவியுடன் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வாகனம் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது ஒரு வாய்ப்பாக அமையுமென்று நினைக்கிறேன். மேலும், இரவு நேரப்பணியை முடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த தடை நீக்கப்பட்டுள்ளது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கிழக்கு ஜெட்டாவிலுள்ள நான் பணிபுரியும் மருத்துவமனையை கிட்டத்தட்ட அடைந்துவிட்டேன். நான் வரும் வழியில் ஒருவர் கூட என்னை கண்டுகொள்ளவில்லை அல்லது வெறித்துப் பார்க்கவில்லை; நான் வெகுகாலமாக காரை இயக்குவது போன்று உணர்கிறேன்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்; சௌதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கு இதுபோன்ற பல வரலாற்று சிறப்புமிக்க தினங்கள் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













