உலகக்கோப்பை கால்பந்து: பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர்

பட மூலாதாரம், DW ESPANOL
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து தொலைக்காட்சியில் நேரலை அளித்து கொண்டிருந்த பெண் பத்திரிகையாளரிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விளையாட்டு ரசிகர்கள் தரும் துன்புறுத்தல்கள் குறித்து அப்பெண் பத்திரிகையாளர் பேசியுள்ளார்.
கொலம்பியா நாட்டை சேர்ந்த ஜூலியத் கொன்ஸலெஸ் தெரன், மாஸ்கோவில் உள்ள டி டயிள்யூ எஸ்பனால் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவரது மார்பகங்களை திடீரென்று பிடித்த ஒரு நபர், அவர் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவர், இச்சம்பவம் குறித்து இணையத்தில் பேசியுள்ளார்.

மெலனியா டிரம்பின் உடையால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
டெக்ஸாஸில் உள்ள குடிபெயர்ந்த குழந்தைகளுக்கான காவல் மையத்தை பார்வையிட சென்ற அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் அணிந்திருந்த உடையால் (கோட்) அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அவரது உடையின் பின்புறத்தில், "நான் உண்மையில் கவலைப்படவில்லை, நீங்கள்?" என்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.
"இதில் எந்த உள்அர்த்தமும் இல்லை" என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குடிபெயர்ந்த குழந்தைகளுக்கு 20,000 படுக்கைகள்

பட மூலாதாரம், US CUSTOMS AND BORDER PROTECTION
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பழைய ராணுவ தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடிபெயர்ந்த குழந்தைகளுக்கு 20,000 படுக்கைகள் வழங்குமாறு அமெரிக்க பாதுகாப்புதுறையின் தலைமையான பென்டகனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எல்லையை தாண்டி தனியாக வந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பிரிந்திருக்கும் குழந்தைகளுக்காக இந்த படுக்கை வசதிகள் கேட்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்த சர்ச்சைக்குரிய கொள்கையை டிரம்ப் திரும்பப் பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரி

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை)முதல் அமலுக்கு வருகின்றன.
2.8 பில்லியன் யூரோஸ் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












