போராட்டக்காரர்களை ஆளுநர் சிறையில் அடைக்க முடியுமா?

போராட்டம் செய்பவர்களை ஆளுநர் சிறையில் அடைக்க முடியுமா?

பட மூலாதாரம், Twitter/mkstalin

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழக ஆளுநர் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் நிலையில், ஆளுநரின் பணிகளை தடைசெய்பவர்களுக்கு 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்வது, அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். ஆனால், துவக்கத்திலிருந்தே தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

ஆளுநர் ஆய்வு செய்யச் செல்லும் மாவட்டங்களில் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

ஜூன் 22ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு எதிராக, தி.மு.கவினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு இவர்களில் 192 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கமாக போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்படும் நிலையில், இப்படி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து ஆளுநரின் ஆய்வுப் பணிகளை எதிர்க்கப்போவதாக தி.மு.க. அறிவித்தது.

மேலும் ஜூன் 23ஆம் தேதியன்று இதைக் கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி தொண்டர்களுடன் பேரணியாக சென்ற மு. க ஸ்டாலின், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை எச்சரிக்கும் வகையில் ஜூன் 22ஆம் தேதி மாலையில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

போராட்டம் செய்பவர்களை ஆளுநர் சிறையில் அடைக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

"ஆளுநர் விஜயம் செய்யும்போது தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர். ஓர் இடத்தில்கூட ஆளுநர் தற்போதைய அரசை விமர்சித்ததோ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோ கிடையாது. இதனை ஆய்வு என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவது மக்களை திசை திருப்பும் செயல். ஆளுநரின் அலுவலகம் என்பது ஐபிசி 124வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. யாராவது ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படும்" என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இம்மாதிரி ஆய்வுகளை ஆளுநர் மேற்கொள்ள ஆரம்பித்தபோது, எதிர்க்கட்சித் தலைவரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து அவரிடம் இந்த விஷயங்களை விளக்கியதாகவும் சட்டத்தைப் புரிந்துகொண்டு தங்களை மாற்றிக்கொள்ள போதுமான அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் இனி வரும் நாட்களிலும் ஆளுநரின் ஆய்வு இதேபோலத் தொடருமென்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும் திங்கட்கிழமையன்று சட்டப்பேரவை மீண்டும் கூடியபோது, இந்த விவகாரத்தை தமிழக சட்டப்பேரவையில் எழுப்ப முயற்சித்த தி.மு.க. அதற்கு சபாநாயகர் அனுமதி தராத நிலையில் வெளிநடப்பும் செய்தது.

ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பியிருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "தமிழகத்தின் தொழில்முனைவோர் தன்னை வந்து சந்திக்கலாம் என அழைப்பு விடுத்தாரே ஆளுநர், அதற்கான அதிகாரம் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் இருக்கிறது?" என்று கேட்டிருக்கிறார்.

ஆளுநரின் மிரட்டலுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஆளுநரை வைத்து பா.ஜ.க. போட்டி அரசாங்கம் நடத்த முடியாது என்றும் வைகோ கூறியிருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டம் 124ஆம் பிரிவு சொல்வது என்ன?

யார் ஒருவர், குடியரசுத் தலைவரையோ, எந்த ஒரு மாநிலத்தின் ஆளுநரையோ அவர்களுக்கு உள்ள சட்ட ரீதியான அதிகாரத்தைச் செயல்படுத்துவதை எந்த விதத்திலாவது தடுத்தாலோ, தாக்கினாலோ, தடுத்துவைக்க முயற்சித்தாலோ, அதற்கு கிரிமினல் பலத்தை பயன்படுத்தினாலோ, கிரிமினல் பலத்தை காட்ட முயன்றாலோ குடியரசுத் தலைவரையோ, ஆளுநரையோ அச்சுறுத்த முயன்றாலோ ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றம், நீதிமன்ற ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாகும்.

போராட்டம் செய்பவர்களை ஆளுநர் சிறையில் அடைக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

"முதல்வர் அதிகாரம்பெற்றால் ஆய்வுகள் முடிவுக்குவரும்"

"ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது, ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுவதென்பதெல்லாம் ஒரு குறியீட்டு நடவடிக்கைகள். அதற்காக 124-வது பிரிவின் கீழ் கைது செய்வது சரியாக இருக்காது. " என்கிறார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து அரசியல் சாஸன சபையில் நடந்த விவாதங்களைச் சுட்டிக்காட்டும் ஹரி பரந்தாமன், இந்தியாவில் அமைச்சரவைக்கே அதிகாரம் என்று அரசியல் சாஸனம் வரையறுத்திருக்கிறது என்கிறார்.

ஒரு விவகாரத்தைப் பற்றி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி ஆளுநர் விளக்கம் பெறலாமே தவிர, அவரே நேரடியாக அதிகாரிகளை அழைத்துப் பேச முடியாது.

அரசியல் சாஸனத்தைப் பொறுத்தவரை, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவர் பதவியே அலங்காரப் பதவி எனும்போது, அவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு எப்படி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கிடைக்குமெனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

"வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென்றால் யார் மீது வேண்டுமானாலும் வழக்குப் பதிவுசெய்யலாம். அது பிரச்சனையில்லை. பிற மாநிலங்களில் ஏன் ஆளுநர்கள் ஆய்வுக்குச் செல்வதில்லை?" என்று கேள்வியெழுப்புகிறார் ஹரி பரந்தாமன்.

தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கு, எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக முடியும் பட்சத்தில் அவரே இம்மாதிரி ஆய்வுகளை அனுமதிக்கமாட்டார்; தான் ஒரு வலிமையான தலைவர் என்று காட்ட முயல்வார் என்கிறார் அவர்.

போராட்டம் செய்பவர்களை ஆளுநர் சிறையில் அடைக்க முடியுமா?

இனிமேல் ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் எதுவும் நடப்பதை ஆளுநர் மாளிகை விரும்பவில்லை; தங்களுக்கும் அதிகாரமிருக்கிறது என்று காட்ட விரும்பியதால் இப்படிச் செய்திருக்கிறார்கள். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காது என்கிறார் அரசியல் சாஸன விவகாரங்களில் தேர்ந்தவரும் தி ஹிந்து நாளிதழின் மூத்த பத்திரிகையாளருமான கே. வெங்கடரமணன்.

124ஏ எனப்படும் ராஜதுரோக வழக்குகளிலேயே தண்டிக்கப்படும் விகிதம் மிகக் குறைவு என்பதைப் பார்க்கும்போது, இந்த வழக்குகள் நிற்காது என்பது அவர்களுக்கும் தெரியும் என்கிறார் அவர்.

ஆனால், அரசு பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொள்வதை ஆதரிக்கும்போக்கு சமீபத்தில் காணப்படுகிறது. அம்மாதிரி ஆதரவு தங்களுக்கும் கிடைக்குமென ஆளுநர் மாளிகை நினைத்திருக்கக்கூடும் என்கிறார் அவர்.

சமீபத்தில் தங்களுடைய நாளிதழ், ஒரு தொலைக்காட்சிக்கு ஆதரவாக தலையங்கம் எழுதியபோது ட்விட்டரில் பலரும் அரசுக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டும் வெங்கட்ரமணன், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், சிறிய கட்சிகள் ஆகியோரை சமூக விரோத சக்திகளாக சித்தரிக்க முயலும் போக்கு தொடங்கியிருக்கிறது என்கிறார்.

போராட்டம் செய்பவர்களை ஆளுநர் சிறையில் அடைக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

ஆய்வுக்குச் சென்றார் சுர்ஜித் சிங் பர்னாலா

ஆளுநர்கள் இம்மாதிரி ஆய்வுக்குச் செல்வது இது முதல்முறையல்ல என்கிறார் அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான ஆர். முத்துக்குமார்.

கடந்த "1980களின் இறுதியில் கருணாநிதியின் ஆட்சி நடைபெற்றபோது, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக பேச்சு பெரிதாக அடிபட்டது. மத்திய அரசு இது தொடர்பாக அறிக்கை கேட்கும் என்று உணர்ந்த அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, சில அதிகாரிகளுடன் கடலோரப் பகுதிகளில் ஆய்வுசெய்தார். ஆனால், அது சரியான நோக்கத்துடன் செய்யப்பட்டதால் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை" என்கிறார் அவர்.

ஆனால், இப்போது தமிழக ஆளுநர் ஆய்வுக்குச் செல்வது என்பது மத்திய அரசு, தங்களுக்கும் இங்கே ஒரு பிடி இருப்பதை காண்பிக்க விரும்புவதன் ஒரு பகுதிதான். மத்திய அரசின் திட்டம் ஏதாவது செயல்படுத்தப்படும்போது, அதை தங்களுடைய திட்டமாக காட்டி, எதிர்வரும் தேர்தலில் பலன்பெறலாம் என எண்ணுகிறது பா.ஜ.க. ஆனால், அந்த வியூகத்திற்குப் பலனிருக்காது என்கிறார் முத்துக்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :