97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட குஜராத் கலவர வழக்கு: மூவருக்கு 10 ஆண்டு சிறை

2002ஆம் ஆண்டு நடந்த நரோதா பாட்டியா வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட உமேஷ் பர்வாட், பஞ்சேந்திர சிங் ராஜ்புத் மற்றும் ராஜ்முகார் செளமல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

நரோதா பாடியா கலவரம்

பட மூலாதாரம், DILIP THAKAR/BBC

படக்குறிப்பு, நரோதா பாடியா கலவரத்தில் கொல்லப்பட்ட அபித் அலி படானின் புகைப்படத்துடன் மனைவி ஆயிஷா பானு

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த மூன்று பேரையும் விடுவித்திருந்தது.

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கியை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான மாயா கோட்னானியை ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அகமதாபாதின் நரோதா பாட்டியா பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் குறைந்தது 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 60 ஹிந்து யாத்ரிகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த இனக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அவர்களி்ல் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.

நரோதா பாடியா கலவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரோதா பாடியா கலவரம்

ரயில் எரிப்பு சம்பவத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று புகார் கூறப்பட்ட நிலையில், குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மூன்று நாட்கள் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

அதில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அகமதாபாதின் நரோதா பாடியா பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் குறைந்தது 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. 62 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

மாயா கோட்னானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாயா கோட்னானி

நரேந்திர மோடி அமைச்சரவையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மாயா கோட்னானி, 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ரயில் எரிப்பு சம்பவத்துக்கு, சதித்திட்டம்தான் காரணம் என குஜராத் அரசால் நியமிக்கப்பட் விசாரணைக் கமிஷன் கடந்த 2008-ம் ஆண்டு அறிக்கை அளித்தது.

ஆனால், 2005-ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையில், ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்றும், ஒரு ரயில் பெட்டியில் சமையல் செய்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் காரணமாக நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :