ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: ஸ்டாலின், திமுகவினர் கைதாகி விடுதலை

போராட்டம் நடத்திய ஸ்டாலினும் கைது

பட மூலாதாரம், TWITTER@MK STALIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டியதாக நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி தொண்டர்களுடன் பேரணியாக சென்ற கட்சியின் செயல்தலைவர் மு. க ஸ்டாலின், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக, மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், தொண்டர்களுடன் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டு நந்தனம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஸ்டாலினும் கைது

பட மூலாதாரம், Getty Images

ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினர் விடுவிக்கப்படும்வரை போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவது என்பது தவறான நடைமுறை இல்லை என்றார். நேரு, இந்திராகாந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது, அவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டிய வரலாறு தமிழகத்தில் உண்டு என்றும், கடந்தமுறை கறுப்பு கொடிக்கு அஞ்சி, தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி விமானத்தில் சென்றதாகவும் கூறிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், யாரையோ திருப்தி படுத்துவதற்காக இந்த அரசு திமுகவினரை கைது செய்கிறது, இப்போது எங்களையும் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றார்.

அவர் மேலும் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர், தங்கள் மீதான ஊழல் வழக்குகள் வெளிச்சத்திற்குவரும் , பின்னர் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், எந்த கேள்வியும் எழுப்பாமல் உள்ளனர் என்றும் மாநில அரசையும் சாடினார்.

ஸ்டாலினின் போராட்டத்தை அடுத்து, ஆளுநர் மாளிகை முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :