உலகப் பார்வை: விளையாட்டுகளில் சூதாட்டத்துக்கு அனுமதி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
அமெரிக்கா: விளையாட்டுகளில் சூதாட்டத்துக்கு அனுமதி

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க உச்ச நீதிமன்றம், அந்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் விளையாட்டு பந்தயத்தை சட்டப்பூர்வமாக்க அனுமதிக்கும் ஒரு மிகப் பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் கேசினோக்கள் மற்றும் குதிரை பந்தயங்களில் பந்தயத்தை அனுமதிக்கும் தீர்ப்பை நாடுமுழுவதும் அமல்படுத்துவதற்கு தற்போது நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இராக் தேர்தல்: ஆட்சி அமைக்கிறது எதிர்க்கட்சி

பட மூலாதாரம், Reuters
இராக்கில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளில் ஷியா போராளிகள் குழு தலைவர் முக்தடா அல்-சதர் தலையிலான எதிர்க்கட்சி கூட்டணி முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ் அமைப்புக்கெதிரான போரில் இராக் வெற்றிபெற்ற பிறகு ஹைதர் அல்-அபாதி தலைமையிலான அரசு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டிற்கு பிறகு மோசமான தினம்

பட மூலாதாரம், EPA
இஸ்ரேலிய துருப்புகள் நேற்று நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கான பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும், இது கடந்த 2014ஆம் ஆண்டு அங்கு வன்முறை வெடித்த பிறகு அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான தினம் என்று பாலத்தீனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாலத்தீனர்களை எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா தனது தூதரகத்தை இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் திறந்ததை அடுத்து இந்த வன்முறை வெடித்தது.

தனியுரிமையை கேள்விக்குறியாக்கும் தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனின் பாதுகாப்பு படைகள் பரிசோதனை செய்து வரும் முகமறியும் தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்புகளின் துல்லியத்தன்மை குறித்து அந்நாட்டில் கேள்வி எழுந்துள்ளது.
பிரிட்டனின் இரண்டு பாதுகாப்பு படைகள் பொது இடங்களில் முகமறியும் தொழில்நுட்பம் அடிப்படையிலான அமைப்புகளை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிப்பதற்கு முயற்சித்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












