''இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலேம்தான்'' - தூதரக தொடக்க விழாவில் டிரம்ப்
ஜெரூசலேத்தில் நடந்த அமெரிக்க தூதரக தொடக்க விழாவில், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ப்ரீட்மன் அமெரிக்க தூதரகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக முறைப்படி அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''இன்று இஸ்ரேலில், ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். முதல் நாடாக தங்கள் தூதரகத்தை திறந்து வைத்ததன் மூலம், மீண்டும் உலகுக்கு வழிகாட்டும் விதமாக அமெரிக்கா செயல்பட்டுள்ளது'' என்று டேவிட் ப்ரீட்மன் கூறினார்.
ஜெரூசலேத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லவில்லை. ஆனால், அவர் இந்நிகழ்வு தொடர்பாக பேசிய காணொளி ஒன்று தொடக்க விழாவின்போது ஒரு பெரிய திரையில் திரையிடப்பட்டது.
''சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலை உலகில் முதன்முதலில் அங்கீகரித்தது அதிபர் ஹாரி ட்ரூமேன் தலைமையிலான அமெரிக்க அரசுதான். இன்று நாம் ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை திறந்துள்ளோம். இது ஒரு நீண்டகால காத்திருப்பு'' என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
''தனது தலைநகரை தீர்மானிக்க இஸ்ரேலுக்கு அதிகாரமுள்ளது''
''இன்று இஸ்ரேல் அரசின் முக்கிய தலமாக ஜெரூசலேம் உள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தாயகமாக ஜெரூசலேம் விளங்குகிறது. மேலும், இஸ்ரேலின் பிரதமர் மற்றும் அதிபர் இயங்கும் தலைமையகமாகவும் ஜெரூசலேம் அமைந்துள்ளது'' என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
''இறையாண்மை கொண்ட மற்ற எந்த நாட்டையும் போல தனது தலைநகர் எதுவென்பதை தீர்மானிக்க இறையாண்மை மிக்க நாடான இஸ்ரேலுக்கும் அதிகாரமுள்ளது'' என்று டிரம்ப் தனது காணொளியில் குறிப்பிட்டார்.
''ஆனாலும், இந்த உண்மையை நாம் பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ள தவறிவிட்டோம். மிக சாதாரண உண்மை என்னவென்றால் இஸ்ரேலின் தலைநகரம் ஜெரூசலேம்தான்'' என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
ஜெரூசலேத்தில் அமெரிக்க தூரதக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் உடன் சென்றுள்ளார். இவர்களுடன் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.
இந்த தொடக்க விழாவில் பேசிய ஜாரெட் குஷ்னெர், ''யூத மக்களின் நிரந்தர இதயம்'' என்று ஜெரூசலேம் நகரை அவர் வர்ணித்தார்.

பட மூலாதாரம், Reuters
''ஜெரூசலேம் நகருக்கு எங்கள் தூதரகத்தை மாற்றியதன் மூலம், அமெரிக்கா எப்போதும் நம்பகத்தன்மை கொண்ட நாடு என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.
குஷ்னெர் பேசி முடித்தவுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு உரையாற்றினார்.
குஷ்னெர், இவாங்கா டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு தான் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
''அதிபர் டிரம்ப் அவர்களே! வரலாற்றை அங்கீகரித்ததன் மூலம் நீங்கள் வரலாற்றை நிகழ்த்தியுள்ளீர்கள்! என்று பேசிய பெஞ்சமின் நெதன்யாஹு, இஸ்ரேலின் மிகப்பெரிய கூட்டாளி நாடு அமெரிக்கா'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
பொது வேலைநிறுத்ததிற்குபிஎல்ஓஅழைப்பு
இதற்கிடையே, காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 43 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்-காஸா எல்லையில் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் மரணத்துக்கு துக்கம் செலுத்தும் விதமாக பொது வேலைநிறுத்ததிற்கு பாலத்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) அழைப்பு விடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகம் தொடங்கப்பட்டதற்கும், காஸா எல்லையில் எதிர்ப்பு தெரிவித்த பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதற்கும் எகிப்து, பாலத்தீனம் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் கண்டனத்தையும், தங்கள் கவலைகளையும் பகிர்ந்துள்ளனர்.
காஸா எல்லையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐ.நா.) பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தனது கவலையை வெளிப்படுத்தியதாக 'தி அசோசியேட்டட் பிரஸ்' செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் இருந்து வரும் செய்திகளால் நான் மிகவும் கவலை அடைந்துளேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி
- பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம்
- சுனந்தா புஷ்கர் வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது வழக்குப்பதிவு
- சர்ச்சைக்குரிய ஜெருசலேம் தூதரகத்தை இன்று திறக்கும் அமெரிக்கா
- நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்தது ஏன்? கீர்த்தி சுரேஷ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












