வடகொரிய - தென்கொரிய அதிபர்கள் சந்திப்பு: யாருக்கு என்ன வேண்டும்?
- எழுதியவர், வர்ஜீனியா ஹரிஸ்ஸன்
- பதவி, பிபிசி
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் தென்கொரிய அதிபர் முன் ஜே-இன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

பட மூலாதாரம், Getty Images
இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் முன்னேறி வரும் நிலையில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை, அமெரிக்காவுடன் வடகொரியா நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கும் வழிவகுக்கும்.
வடகொரியா அணு ஆயுதத்தைக் கை விடுவதும் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலை நாட்டுவதுமே இந்தச் சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் இரு நாடுகளிலும் பிரிந்து சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் ஆகியவை குறித்தும் இரு தலைவர்களின் சந்திப்பின்போது விவாதிக்கப்படும்.
இந்த சந்திப்பு எவ்வளவு முக்கியமானது?
சீன அதிபர் ஷி ஜின்பின் உடனான கிம் ஜாங்-உன்னின் சந்திப்பு போல இந்த சந்திப்பு ரகசியமானதாக இல்லை. கிம் மற்றும் ஷி ஆகியோரின் சந்திப்புக்கு பின்னரே அது குறித்த தகவல் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பின் ஒரு பகுதி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கிம் ஜாங்-உன்னின் தந்தை கிம் ஜாங்-இல் வடகொரிய அதிபராக இருந்தபோது அப்போதைய தென்கொரிய அதிபர்களான கிம் டே-ஜங் மற்றும் ரூ மூ-ஹியூன் ஆகியோரை முறையே 2000 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் சந்தித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த சந்திப்புகளில் அணு ஆயுதத் தடுப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியன விவாதிக்கப்பட்டன. தனது முயற்சிகளுக்காக கிம் டே-ஜங் 2000இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அதன்பின் 2004இல் இரு நாடுகளும் இணைந்து இயக்கும், வடகொரியாவில் அமைந்துள்ள கேசாங் தொழில் வளாகம் நிறுவப்பட்டது. கொரியப் போரால் பிரிந்த பல குடும்பங்கள் மீண்டும் இணைந்தன.
எனினும், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் நிற்கவில்லை. தென்கொரியாவில் அமைந்த பழமைவாத அரசுகளால் அமைதி முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. வடகொரியாவை தனிமைப் படுத்துவதைத் தவிர்த்து, தென்கொரியாவைச் சார்ந்து இயங்கச் செய்யும் முயற்சிகள் அப்போது முதல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
தென்கொரியா விரும்புவது என்ன?
பத்தாண்டுகளுக்கும் மேலான பதற்றநிலை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பிறகு வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைத்துள்ளது தென்கொரிய அரசு.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு பதவியேற்ற தற்போதைய அதிபர் முன் ஜே-இன், முன்னாள் அதிபர் ரூ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது அவரது நெருங்கிய சகாவாக இருந்தார்.
தென்கொரியாவின் பன்முஞ்சோம் எல்லை கிராமத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பில், இரு கொரிய நாடுகளும் 1953இல் மேற்கொண்ட போரை அதிகாரபூர்வமாக முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என்று முன் கூறியுள்ளார்.
அணு ஆயுதத் தடுப்பு மற்றும் ராணுவ ரீதியிலான பதற்றங்களைத் தணிப்பது ஆகியன தங்கள் முக்கிய நோக்கம் என்று ஒருங்கிணைப்புக்கான தென்கொரிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. 2016 முதல் மூடப்பட்டுள்ள கேசாங் தொழில் வளாகம் மீண்டும் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வளாகத்தில் தென்கொரியார்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் சுமார் 55,000 வடகொரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கொரியப் போரால் பிரிந்த சுமார் 60,000 குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் இன்று விவாதிக்கப்படுகிறது. வடகொரிய சிறைகளில் உள்ள வெளிநாட்டவர்களை விடுவிப்பது குறித்தும் தென்கொரியா கோரிக்கை எழுப்பும்.
வடகொரியா விரும்புவது என்ன?
தங்கள் நாடு மீதான பொருளாதார தடைகளை நீக்குவதற்காகவே வடகொரிய அதிபர் கிம் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், AFP
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அதிகரித்தபின், அமெரிக்கா மற்றும் ஐ.நா அவை அந்நாடு மீதான தடைகளை அதிகரித்தன.
எனினும், தங்களின் தன்னம்பிக்கையால்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளோமே தவிர, தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் அல்ல என்று வடகொரியா கூறியுள்ளது.
கடந்த வாரம் தங்களின் அணு ஆயுத சோதனை நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்வதாக வடகொரியா அறிவித்தது. இதை தென்கொரிய அதிபர் முன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் வரவேற்றனர்.
"சர்வாதிகாரிகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் , அவர்களுக்கான அழுத்தம் இருக்கும். வடகொரியாவில் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ளவே கிம் கவலைப்பட வேண்டியுள்ளது," என்கிறார் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீ.
என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்?
வடகொரியா அணு ஆயுதங்களைக் கை விடுவது மற்றும் இரு கொரிய நாடுகளின் இணைப்பு ஆகியவற்றுக்கான தொடக்கப்புள்ளியாக இந்தப் பேச்சுவார்த்தை பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கிம் ஜாங்-உன் மற்றும் முன் ஜே-இன் இடையேயான தனிப்பட்ட உறவு எப்படி இருக்கும் என்பதும் இந்தப் பேச்சுவார்த்தை எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பதை முடிவு செய்யும் என்கிறார் தென்கொரியாவின் அசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிசி ஸ்டடிஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிம்.
அவர் இவ்வாறு கூறுகிறார், "இது இந்த தலைவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல சந்திப்பாக இருக்கும். ஆனால், இதனால் தனது அணு ஆயுதத் திட்டங்களை வடகொரியா கைவிடுமா என்று தெளிவாகத் தெரியவில்லை."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












