வட - தென் கொரி்யா உச்சிமாநாட்டில் புறக்கணிக்கப்படும் முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், STR
வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் உச்சிமாநாடு பல தரப்பினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த உயர் சந்திப்பில் சில அடிப்படை விஷயங்களை விவாதிக்க மறுத்து, பியோங்யாங்கின் அணு ஆயுத ஒழிப்புக்கே பிரதான வெளிச்சம் கிடைப்பதாக அந்த பிராந்தியத்தில் உள்ள பலர் வருத்தப்படுகின்றனர்.
சமாதான கிராமமான பன்முன்ஜோமில் இன்று (ஏப்ரல் 27) வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் இடையில் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. 2012-ல் கிம் ஜாங்-உன் அதிபர் பதவிக்கு வந்தபிறகு இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் முதல் உச்சிமாநாடு இது.
அணு ஆயுத ஒழிப்பு, அமைதியை கட்டமைத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீரமைத்தல் ஆகியவற்றுக்கு இந்த உச்சிமாநாடு நிரலில் முதன்மை கவனம் செலுத்தப்படும் என தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
பியோங்கயாங்கின் மனித உரிமைகள் அறிக்கை, கொரிய போரில் பிரிந்துள்ள குடும்பங்கள் மற்றும் வடகொரியாவால் கடத்தப்பட்ட ஜப்பானியர்கள் உள்ளிட்ட சில விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படப் போவதில்லை.
மனித உரிமைகள் மற்றும் குடும்ப மறு இணைவுகள்
மனித உரிமை மீறல் விஷயத்தில் உலகின் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக வடகொரியாவின் மனித உரிமை ஆவணப்பதிவானது இடப்பெற்றுள்ளது. ஆனால் இவ்விவகாரம் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படாமல் இருக்கலாம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நாற்பது வலதுசாரி குழுக்களின் பிரதிநிதிகள் சோலில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி கூடி, தங்கள் அரசு பியோங்யாங்கின் உரிமை மீறல் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தென் கொரியாவின் முன்ஹ்வா செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு கொரிய நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியதால் கடந்த மூன்று ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேரவில்லை என கொரியா ஹெரால்டு குறிப்பிட்டுள்ளது.
''அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவது மற்றும் ராணுவ பதற்றத்தை தணிப்பது ஆகியவற்றின் வாயிலாக கொரிய தீபகற்பத்தில் வட கொரியா அமைதியை ஏற்படுத்துவது குறித்து சந்தேகமில்லை. ஆனால் 1953 கொரிய போர் முடிவில் வரையப்பட்ட எல்லையினால் தங்களது அன்புக்குரியவர்களை பிரிந்திருப்பவர்கள் அவர்களை மீண்டும் சந்தித்து இணைவதற்காக காத்திருக்கும் வலியை போக்க வேண்டியது சற்றும் முக்கியத்துவத்துக்கு குறைந்த விஷயமல்ல'' என ஏப்ரல் ஐந்தாம் தேதி அதன் இதழின் தலையங்கத்தில் எழுதியுள்ளது.

வட கொரியா மன்னிப்பு கேட்க கோரிக்கை
தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான சுதந்திர கொரியா கட்சி இந்த மாநாட்டில் வட கொரியா மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உண்மையாகவே விரும்பியதை வெளிக்காட்ட தனது முந்தைய தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் ஆத்திரமூட்டல் செயல்களுக்காக வட கொரியா மன்னிப்பு கேட்க வேண்டுமென அக்கட்சி கூறியுள்ளது.
''மக்களின் நம்பிக்கையைப் பெறவும் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்கவும் தென் கொரிய அரசு வட கொரியாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும்'' என அக்கட்சி தெரிவித்துள்ளது.
உதாரணமாக, சியோனானில் கடந்த 2010-ம் ஆண்டு தென் கொரிய கப்பலை மூழ்கடித்ததையும் அதில் பயணித்த 46 பேர் இருந்ததையும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தென் கொரியா வழிநடத்திய ஒரு சர்வதேச கமிஷன் வட கொரியா இந்நிகழ்வுக்கு பொறுப்பு என தெரிவித்தது. ஆனால் வட கொரிய அதனை நிராகரித்தது.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிழைத்தவர்கள் தென் கொரியா இந்த உச்சிமாநாட்டில் வடகொரியா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தவேண்டுமென விரும்புகின்றனர். இந்த நிகழ்வுக்கு வட கொரியாவின் மீது முழுப் பழியையும் சுமத்துவதற்கு தென் கொரிய அதிபர் நிர்வாகம் தயங்குகிறது.
பிப்ரவரி மாதம் தென் கொரியாவுக்கு வட கொரியாவின் தலைமை ராணுவ அதிகாரி கிம் யோங்- சோல் வருவதையொட்டிய ஒரு செய்தியாளர் விளக்கக் கூட்டத்தில் தென் கொரியாவின் ஒற்றுமைக்கான அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பைக் டே -ஹியுன் பேசுகையில் '' போர்க்கப்பல் மூழ்கிய விவகாரத்தில் வடகொரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் அப்போது உளவு நிறுவனத்தின் தலைவராக கிம் இருந்ததும் மிக தெளிவானது. ஆனால் இந்நிகழ்வுக்கு மிகவும் குறிப்பாக வடகொரியா மீது சுட்டிக்காட்டுவதற்கு ஓர் எல்லை இருக்கிறது'' என்றார்.
கிம் யோங்- சோல் இந்த தாக்குதல் நடத்துவதற்கு சூத்திரதாரியாக இருந்துள்ளார் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.
கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படும் ஜப்பான்
ஜப்பானை பொறுத்தவரையில் 1970 மற்றும் 1980 களில் ஜப்பான் நாட்டினர் கடத்தப்பட்டதே வடகொரியாவுடனான மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகியவை வடகொரியாவுக்கு இந்தப் பிரச்னையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜப்பான் விரும்புகிறது. அமெரிக்காவுக்கு சமீபத்தில் ஜப்பான் பிரதமர் சென்றபோது பிரதமர் ஷின்ஷோ - அபே அதிபர் டிரம்பிடம் தென் கொரியாவுடனான அமெரிக்காவின் உச்சிமாநாட்டில் கடத்தல் விவகாரம் குறித்து பேசவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வடகொரிய பிரச்னைகள் குறித்து அதிபர் டிரம்பிடம் நெருக்கமாக ஆலோசனை சொல்ல அபேவைத் தவிர வேறு எந்த தலைவராலும் முடியாது என்பதை பிரதமர் அபே - அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு காட்டுகிறது என ஜப்பானின் முன்னணி செய்தி இணையதளமான நிக்கேய் கூறியுள்ளது.
வடகொரியாவின் தற்போதைய சூழ்நிலையில் ஜப்பான் முக்கியமான பங்களிப்புச் செய்யக்கூடியது என அதிபர் டிரம்ப் அறிந்திருந்தால், ஜப்பான் பிரதமர் அமெரிக்க அதிபரிடையேயான சந்திப்பு வெற்றிகரமானது என சொல்லலாம் என ஒரு ஜப்பானிய அரசு அதிகாரி நிக்கேயிடம் தெரிவித்திருந்தார்.
அபே இவ்விவகாரம் குறித்து தென் கொரிய அதிபர் முன் ஜே-இன்னிடமும் பேசியுள்ளார். ஏப்ரல் 27-ல் நடக்கவுள்ள உச்சிமாநாட்டில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க முன் உறுதியளித்ததாக தகவல் வெளியானது.'' அதிபர் கிம்மிடம் ஜப்பானிய கடத்தல் பிரச்னையை தீர்ப்பது வடகிழக்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டை உதவும் என சொல்வதற்கு நான் திட்டம் வைத்திருக்கிறேன்'' என ஜப்பான் பிரதமர் அபேவிடம் முன் கூறியுள்ளார் என தென் கொரிய அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் கிம் -யுய்-கியோம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் பல முறை தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவும், இந்த பிரச்னைகளை விட அணுசக்தி வளர்ச்சி உள்ளிட்ட ''முக்கிய'' விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியதாக ஜப்பான் தினசரியான சன்கேய் சிம்புய் ஏப்ரல் 22-ல் செய்தி வெளியிட்டுள்ளது.

அணு ஆயுத முடக்கம் குறித்த அவநம்பிக்கை
இந்த உச்சி மாநாட்டில் பிரதான பிரச்னையான அணு ஆயுத ஒழிப்பும் முழுமையாக விவாதிக்கப்படாமல் போகலாம் என்ற கவலைகள் உள்ளன.
உச்சிமாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு அணு சக்தி மற்றும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால் அணு ஆயுத ஒழிப்பு பற்றி வடகொரியா எதுவும் குறிப்பிடவில்லை. இவை பியோங்கியாங்கின் நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.
”அணு ஆயுத பரிசோனைக்கான இடத்தை தானே அகற்றும் முயற்சியில் வடகொரியா உள்ளது. இது அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆதரவை வென்றெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை'' என தெற்கு மற்றும் வடக்கு வளர்ச்சிக்கான தலைவர் சோய்-க்யுங்-ஹீ தெரிவித்துள்ளார்.
47 பல்கலைகழகங்களின் பிரதிநிதிகள் உள்ள ஒரு மாணவர் ஒன்றியம் நடத்திவரும் உண்மை கருத்துக்களம், வடகொரியாவின் அறிவிப்பு அது அணு ஆயுதத்தை விட்டுவிட்டதாக அர்த்தப்படுத்தவில்லை என்றது.
''தென் கொரிய அரசு மற்றும் சில ஊடகங்கள் பியோங்யாங் மேற்கொண்டு சோதனைகளை நடத்துவதை நிறுத்தி வைத்துள்ளது என்ற கூற்றில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. ஆனால் இது தவறாக வழிநடத்துகிறது. வடகொரியா அணு ஆயுத ஒழிப்புக்கான அதன் விருப்பத்தை காண்பிக்கவில்லை'' என உண்மை கருத்துக்களம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












