காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். 30 நாட்கள் கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ராஜா விசாரித்துவருகிறார். முன்னதாக, இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த சென்னை நகரக் காவல் துறை, "மெரீனாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடம் ஏதாவது ஒன்றில், ஒரே ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்திக்கொள்ளலாம்" என்று கூறியிருந்தது.
இதையடுத்து, இதற்கு முன்பாக சென்னை மெரீனா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்துவதற்கு எப்போது அனுமதி அளிக்கப்பட்டது என பதில் அளிக்கும்படி காவல் துறையிடம் நீதிபதி கேட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு மெரீனாவில் போராட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்றும் விழிப்புணர்வுப் பேரணிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பிறகு சில சட்டவிரோதமான போராட்டங்கள் மெரீனா கடற்கரையில் நடைபெற்றதால், அங்கு போராட்டங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ராஜா, "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமாகிவிட்டதா? திருவிழா நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்பதால், அந்த விழாக்களை நடத்தக்கூடாது என காவல்துறை சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
மேலும், போராட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவற்றைத் தடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.
இந்த வழக்கில் நாளையோ, நாளை மறுநாளோ தீர்ப்பு வழங்கப்படுமென நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












