'பேச்சுவார்த்தை தொடர்பாக வடகொரியாவிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை'
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு பற்றி இதுவரை பியோங்யாங்கில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என தென் கொரியா கூறுகிறது.

பட மூலாதாரம், KCNA
ஒரு ஆச்சரியமான முன்னேற்றமாக, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வட கொரியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராக இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் கூறினார்கள்.
திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்கள் தெளிவற்றவை, சந்திப்பு நடக்கும் இடம், நிகழ்ச்சி நிரல் குறித்த எந்த விவரங்களும் இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
"வட கொரியா-அமெரிக்க இடையிலான சந்திப்பு தொடர்பாக வட கொரிய ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை" என தென் கொரிய ஒத்துழைப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார்.
"அவர்கள் இந்த விஷயத்தை எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர் என்பதோடு, அவர்களின் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு அவர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது."

பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தை தொடர்பாக முதலில் ட்ரம்பிடம் பேசிய பேசிய தென் கொரிய அதிகாரிகள் இப்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் தொடர்புகொண்டு திட்டமிட்ட பேச்சுவார்த்தை பற்றி விரிவாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு ஆலோசகர் சுங் யுய்-யங், சீன அதிபரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதனிடையே, புலனாய்வு முகமையின் தலைவர் ஷு ஹூன், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்திக்கிறார்.
முன்னெப்போதும் இல்லாத முன்முயற்சி
வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஓராண்டுக்கும் அதிகமாக காட்டமான விமர்சனங்கள் நிலவிவந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ராணுவ மோதலாக தீவிரமடையக்கூடும் என்ற சூழ்நிலை நிலவியது. எனவே தற்போதைய முன்னேற்றம் சர்வதேச அளவில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வட கொரியா கடந்த ஆண்டு பல அணுஆயுத சோதனைகளை நடத்தியதுடன், நீண்ட தூர ஏவுகணைகளையும் உருவாக்கியது என்பதும் அதில் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதிவரை அணு குண்டுகளை இயக்கும் வல்லமை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
பதவியில் இருக்கும்போது எந்தவொரு அமெரிக்க அதிபரும், வட கொரிய தலைவர்கள் யாரையும் சந்தித்ததில்லை என்ற நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னெப்போதும் இல்லாத இந்த முன்முயற்சி வரவேற்கத்தக்கது.
இருந்தபோதிலும், இரு தலைவர்களின் சந்திப்பு பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை எந்த தகவல்களும் தெளிவானதாக இல்லை.
"பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயத்தை வாஷிங்டன் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள பியோங்யாங் விரும்புகிறது" என்று கருதுவதாக CSIS பசிபிக் மன்றத்தில் ஆராய்ச்சி மாணவரான ஆண்ட்ரே ஆபிரகாமியன் பிபிசியிடம் கூறினார்.
"வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியில் ஏற்கனவே சற்று குழப்பம் இருக்கிறது, எனவே வடகொரியா, இது பற்றி பொதுமக்களிடம் வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்னர் சில அடிப்படை விதிகளை உருவக்க விரும்பலாம்" என்று ஆபிரகாமியன் கூறுகிறார்.
தடைகளில் இருந்து நிவாரணம் கிடைக்குமா?
இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை முன்னெடுத்துச் செல்லப்பட்டால், மே மாதத்தில் டிரம்ப், கிம்மை சந்திப்பார். அதற்கு முன் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சந்திப்பார்கள்.
பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரியா ஒத்துக்கொள்வது அணுசக்தி யுக்திகளை விட்டுக்கொடுக்கும் முடிவு என்று சில பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்த கருத்தை மறுக்கும் வேறு சில அரசியல் நோக்கர்கள், வெறுமனே ஒரு பிரசார வெற்றிக்காகவும், நாட்டின் மீது சில ஆண்டுகளாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளை தளர்த்திக் கொள்ளும் ஒரு முயற்சியாகவும் வடகொரியா அரசியல் சாதுரியத்துடன் நடந்துக் கொள்கிறது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
"பொருளாதாரத் தடைகளிலிருந்து நிவாரணங்கள் சிலவற்றை பெறுவது வடகொரியாவின் குறுகிய கால இலக்குகளாக இருக்கும்," என்று ஆபிரகாமியன் கருதுகிறார்.

கிம் ஜோங்-உன் பிரசாரத்திற்காக இந்த சந்திப்பை பயன்படுத்துவார் என்று சில நிபுணர்கள் எதிர்மறையாக கருதுகின்றனர். இதை பெரிய கவலையாக பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பது என்பது, வட கொரியாவின் அரசியல் அமைப்புமுறை, மனித உரிமைகள் பதிவு அல்லது ஆயுதத் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக பொருள் கொள்ளக்கூடாது."
கிம்மை சந்திக்க முடிவு செய்த டொனால்ட் டிரம்ப்பின் தீர்மானத்தை ஞாயிறன்று ஆதரித்து பேசிய சி.ஐ.ஏ இயக்குனர் மைக் போம்பியோ, பேச்சுவார்த்தைகளின் அபாயங்களை புரிந்துகொண்டு, வடகொரியாவைக் கையாள்வதற்கான "பரந்த விரிந்த" சவால்களை எதிர்கொள்வதற்கான தனது சொந்த கண்களை (கண்ணோட்டத்தை) அமெரிக்க அரசு கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று பேரணி ஒன்றில் ஆதரவாளர்களிடையே பேசிய அமெரிக்க அதிபர், வட கொரியா அமைதியை விரும்புவதாக தாம் நம்புவதாக தெரிவித்தார். ஆனால், அணுஆயுதங்களை விட்டுக் கொடுக்காவிட்டால், பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க ஊடகங்களின்படி, அமெரிக்க அரசின் முக்கிய தலைவர்களிடம் ஆலோசிக்காமலேயே டிரம்ப் வட கொரியா அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்துவிட்டார். மேலும், இந்த முடிவை "அதிபரே எடுத்ததாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












