குரங்கணி: சிகிச்சைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்ட காயமடைந்தவர்கள்

குரங்கணி

குரங்கணி காட்டுத்தீயில் இறந்த 9 நபர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நான்கு லட்ச ரூபாய் வழங்க அனுமதித்து ஆணை பிறப்பிக்குமாறு, வருவாய் துறை முதன்மைச்செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்குத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கடிதம் எழுதியுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த தேவி மற்றும் சென்னையை சேர்ந்த நிஷா ஆகியோர் 100% தீக்காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் திருப்பூரை சேர்ந்த சக்திகலா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 99% தீக்காயங்களுடன் மதுரை கிரேஸ் கெனட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 13 பேர்கள் 75%, 53% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களை, மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விமான படை உதவி வருகிறது.

குரங்கணி காட்டுத் தீ

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக கோவைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 4 பேர்ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும்.

இறந்தவர்களில் மூன்று பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.

குரங்கணி காட்டுத் தீ

தேனி, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிக்கி உள்ளவர்கள் மீட்க தரைவழியாக 16 கமாண்டோ வீரர்கள் சென்றுள்ளனர்.

குரங்கணி

மீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

தீப்பற்றி எரிந்ததும் புகை சூழ்ந்துக் கொண்டதால் தாங்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும் 6 மணி நேரம் கழித்து மீட்பு பணியாளர்கள் வந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போது தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலக்கியா(29) பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பெண்கள் தினத்திற்காக தாங்கள் 27 பேர் இந்த மலையேறுதலுக்காக குரங்கணி வந்ததாகவும் தெரிவிக்கிறார் இலக்கியா.

சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் வந்தபோது தனக்கு அருகில் இருந்தவர் பலத்த காயமடைந்திருந்ததால் அவர்களை தூக்கிச் செல்லுமாறு மீட்பு பணியாளர்களிடம் கூறிய இலக்கியா மலையிலிருந்து நடந்து கீழே வந்து சேர்ந்துள்ளார்.

குரங்கணி

இதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்கொண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத் தீ: மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள்

மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயாரக உள்ளன. திருச்சியிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். போதுமான மருந்துகள் உள்ளன என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர், "ஆறு மருத்துவ குழுக்கள் நேரடியாக சிகிச்சை அளிக்க மலை பகுதிகளுக்கு சென்றுள்ளனர்" என்றார்.

அரசு இராசாசி மருத்துவமனை

மூன்று பேர் 90 சதவீத காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார். மேலும் அவர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.முதல் கட்டமாக மீட்கப்பட்ட 8 பேர் நலமாக உள்ளனர் என்கிறார்.

மீட்கப்பட்டவர்களில் பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளதாக கூறும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன." என்கிறார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திலேயே தீக் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

வழிகாட்டி கைது

இளைஞர்களை குரங்கணி மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற வழிகாட்டி ராஜேஷை தேனி காவல்துறையினர் கைது செய்தனர்.

குரங்கணி
உயிரிழந்தவர்களின் உடல்கள்

காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை தொடங்கியது.

விசாரணைக்கு உத்தரவு

காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எந்த அனுமதியும் இல்லாமல் அவர்கள் இந்த மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். இனி இது போல பயிற்சி மேற்கொள்ள கண்டிப்பாக அரசு அனுமதி பெறவேண்டும் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மலையேற்ற பயிற்சியாளர் ஆர். மோகன், "எந்த முதலுதவி உபகரணங்களும் இல்லாமல் இவர்கள் மலையேற்ற பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். குறைந்தது 3 பயிற்சியாளர்களாவது இவர்களோடு வந்திருக்க வேண்டும்." என்கிறார்.

மீட்பு பணி நிறைவடைந்ததுள்ள நிலையில் இன்னும் அங்கு சில பகுதிகளில் காட்டுத்தீ எரிந்துக் கொண்டிருக்கிறது என்கிறார் பிபிசி தமிழின் செய்தியாளர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :