விவசாயிகள் கோரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையின் முக்கிய அம்சம்

பட மூலாதாரம், AFP
கடும் வறட்சி மற்றும் கடன் நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநிலத்தின் நாசிக்கிலிருந்து தலைநகர் மும்பையை நோக்கிய பேரணியின் இறுதிப்பகுதியில் உள்ளனர்.
குறிப்பாக இந்த பேரணியில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகள் ஆவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே, நிலவுரிமை, கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்தி இப்பேரணியில் பங்கேற்றுள்ளனர் விவசாயிகள்.
கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
விவசாயத்திற்கான முதல் தேசிய அளவிலான ஆணையம்
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து அறிவதற்காக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி விவசாயத்திற்கான தேசிய ஆணையத்தை டாக்டர் எம.எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு விவசாயத்திற்காக அமைக்கப்பட்ட முதல் ஆணையம் இதுவாகும்.

பட மூலாதாரம், Getty Images
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது முதல் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த இந்த ஆணையம், தனது ஐந்தாவது மற்றும் கடைசி அறிக்கையை 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் இடம்பெற்ற பத்து பரிந்துரைகளில் முக்கியமான ஐந்து பரிந்துரைகளை சுருக்கமாக இங்கே காண்போம்.
நிலச் சீர்திருத்தங்கள்
பயிர் மற்றும் கால்நடை சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவதற்கு நிலச் சீர்திருத்தம் என்பது மிகவும் அவசியமானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பிரதான விவசாய நிலம் மற்றும் வனப்பகுதிகள் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக பெருநிறுவனங்களுக்கு திசைத்திருப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
- காடுகளை ஒட்டி வாழும் கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் பழங்குடிகளுக்கு காட்டினுள் செல்லும் உரிமையை உறுதி செய்தல்.
- விவசாய நிலத்தை விற்பதற்கான பல அளவீடுகளை கொண்ட வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
நீர்ப்பாசனம்
- விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் நிலையான மற்றும் நியாயமான வகையில் தண்ணீர் கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- தண்ணீர் வழங்கலை அதிகப்படுத்துவதற்காக மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்த்தேக்கங்கள் புதுப்பித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்படவேண்டும்.
கடன் மற்றும் காப்பீடு
சரியான நேரத்தில், போதுமான அளவு கடனுதவி வழங்குவது என்பது சிறிய விவசாய குடும்பங்களின் அடிப்படை தேவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- மிகவும் வறிய மற்றும் தேவையுள்ளவர்கள் கடன் பெறும் வகையில் கடன் அமைப்பு முறையின் அடிப்படையை விரிவாக்கம் செய்யவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அரசாங்க உதவியுடன் பயிர் கடன்களுக்கான வட்டியை நான்கு சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.
- கடனை, காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான உரிமை, வறட்சி மற்றும் அழிவுக்குள்ளான பகுதிகளை சேர்ந்தவர்களின் நிலைமை சரியாகும் வரை கடன்களுக்கான வட்டியை ரத்து செய்தல் போன்றவை அமல்படுத்தப்பட வேண்டும்.
- இயற்கைப் பேரழிவுகளுக்குப் பின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வேளாண் இடர் நிதி ஒன்று நிறுவப்படவேண்டும்.
- கடன்-பயிர்-கால்நடை மற்றும் மனிதர்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பட மூலாதாரம், AFP
விவசாயிகளின் தற்கொலைகள் தடுப்பு
- மலிவான உடல்நலக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஆரம்ப சுகாதார மையங்கள் புதுப்பிக்கப்படவேண்டும்.
- விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிப்பதை உறுதி செய்வதற்காக மாநில அளவிலான விவசாயிகளுக்கான ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
- தரமான விதை மற்றும் பிற விவசாய உதவிப்பொருட்கள் மலிவு விலையிலும் சரியான நேரம் மற்றும் இடத்திலும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- சர்வதேச விலையேற்றத்திலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் போட்டித்திறன்
- குறைந்தபட்ச ஆதரவு விலையை செயல்படுத்துவதில் முன்னேற்றமடைய வேண்டும்.
- உற்பத்தி செலவுகளின் சராசரி செலவு விட, குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகபட்சமாக, குறைந்தபட்ச ஆதரவு விலையானது இருக்க வேண்டும்.
- விவசாயிகள்-நுகர்வோர்களுக்கிடையேயான நேரடி இணைப்புகள் எளிதாக்கப்பட வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












