"வட கொரிய அதிபரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் டிரம்பிற்கு தெரியும்"

வட கொரிய அதிபரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் டிரம்பிற்கு தெரிந்துதான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மற்றும் கிம்

பட மூலாதாரம், Reuters

"விளம்பரத்திற்காக அவர் இதை செய்யவில்லை என்றும், பிரச்சனையை சரி செய்வதற்கே அவர் அங்கு செல்கிறார்" என்றும் ஞாயிறன்று ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய போம்பேயோ தெரிவித்தார்.

இந்த சந்திப்பு "உலகிற்கு பெரிய ஆதாயத்தை ஏற்படுத்தும்" என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் பேச்சுவார்த்தை சரியாக நடைபெறவில்லை என்றால் முந்தைய நிலையைக் காட்டிலும் இரு நாடுகளுக்குமான உறவு மோசமானதாக மாறும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் வட கொரிய தலைவரை சந்தித்ததில்லை. வியாழனன்று தென் கொரிய அதிகாரிகள் வட கொரிய அதிபரை சந்திக்க வேண்டும் என டிரம்பிடம் கோரிக்கை விடுத்ததும் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது. அது டிரம்பின் நிர்வாகத்தினருக்கே ஆச்சரியமளிக்கக்கூடியதாக இருந்தது.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருக்கும் சவாலை டிரம்பின் நிர்வாகம் "கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்பதாக" போம்பேயோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமையில் வட கொரியாவிற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, அதன் பொருளாதாரத்தை பாதிப்பதால் வட கொரியா பேச்சு வார்த்தைக்கு சம்மதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

"வட கொரியாவின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளது; மேலும் வட கொரிய தலைவர் மீது மிகுந்த அழுத்தம் உள்ளது" என்று போம்பேயோ ஃபாக்ஸ் நியுஸிடம் தெரிவித்துள்ளார்,

இந்த பேச்சுவார்த்தையின் "தெளிவான நோக்கம்" கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களின் பயன்பாட்டை ஒழிப்பதே ஆகும் என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பதற்கான திடமான, நம்பத்தகுந்த வழிமுறைகள் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வகுக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் செனேட்டர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா இந்த பேச்சுவார்த்தையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமோ என்ற அச்சம் இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் செனேட்டர் எலிசபத் வாரென் தெரிவித்துள்ளார்.

ஆனால் பென்னிசில்வேனியாவில் நடைபெற்ற அரசியல் பேரணி ஒன்றில் "வடகொரிய அமைதியை விரும்புவதாக" தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :