நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49 பேர் பலி

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர்.

Photo showing smoke rising from the airport runway

பட மூலாதாரம், Twitter/@Bishnusapkota

திங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.

திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

விமானத்தின் ஜன்னலை உடைத்து தப்பித்த ஒரு பயணி, தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான விமானம் கடுமையான அதிர்வினை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49 பேர் பலி

பட மூலாதாரம், BISHNU SAPKOTA

பிபிசி நேபாள சேவையிடம் பேசிய போலீஸ் பேச்சாளர் மனோஜ் நேபுனா, விமான விபத்தில் காயமடைந்த 22 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

காணாமல் போனவர்களாக முன்பு கருதப்பட்ட 8 பேரும் தற்போது உயிரிழந்ததாக அதிகாரிகளால் ஊகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேபாளம்: தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : பலர் பலி?

பட மூலாதாரம், EPA

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்த நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா , இந்த விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்திட உறுதியளித்துள்ளார்.

விமான ஓடுதளத்தின் தெற்கு பகுதியில் இருந்து தரையிறங்க இந்த விமானம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விமானம் வடக்கு பகுதியில் இருந்து தரையிறங்கியது'' என்று நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் பொது மேலாளர் சஞ்சீவ் கௌதம் தெரிவித்ததாக காத்மாண்டு போஸ்ட் பத்திரிக்கை கூறியுள்ளது.

''அசாதாரண முறையில் நடந்த இந்த விமான தரையிறக்கம் குறித்த காரணங்களை இன்னமும் நாங்கள் முழுவதுமாக அறிந்துகொள்ளவில்லை'' என்று அவர் மேலும் கூறினார்.

சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புகை எழும்புவதை காண்பிக்கின்றன.

தீயை அணைக்க கடுமையாக போராடிய தீயணைப்பு வீரர்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தீயை அணைக்க கடுமையாக போராடிய தீயணைப்பு வீரர்கள்

விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் S2-AGU என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :