லண்டன்: உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோயில்
- எழுதியவர், ராகுல் ஜோக்லேகர்,
- பதவி, பிபிசி, லண்டன்
லண்டனில் உள்ள ஒரு மிகப்பெரிய கோயில், அங்கு வசிக்கும் இந்து சமய மக்களை உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறது. அந்தக் கோயில், இந்து மத நூல்கள் எதுவும் உடல் உறுப்புகள் தானம் செய்வதை தடை செய்யவில்லை என்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்தில் வாழும் ஆசிய மக்கள் மத்தியில் உடல் உறுப்புகள் தானம் அளிப்பதில் கடும் நெருக்கடி நிலவுகிறது.
லண்டனின் மிகப்பெரிய ஆலயமான பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் 50 பேர் திரண்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை வணங்குவதற்காக வரவில்லை. அவர்கள் அங்கு பேசுவதற்காக வந்திருக்கிறார்கள். உடல் உறுப்பு தானம் குறித்து பேசுவதற்காக வந்திருக்கிறார்கள்.
இந்துக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்து தவறான புரிதல் இருக்கிறது. அதை களைவதற்காகத்தான் இந்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.
லண்டன் பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலின் தலைமை சாது யோக்விவேக்தாஸ் கூறுகிறார், "ஒருவருக்கு வாழ்வளிப்பது, இந்துச் சமயத்தில் தானமாக பார்க்கப்படுகிறது."
"ஆசியர்களாகிய நாங்கள், சமய பழக்கங்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்கள் சமயத்தில் உடல் உறுப்பு தானம் செய்யாதீர்கள் என்பார்கள். ஏனெனில் நாங்கள் சொர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அதனால், உடல் தானம் அளிப்பது, எங்கள் சமய கலாசாரத்திற்கு எதிரானது என்று நம்பினோம்." என்கிறார் லண்டப் ஃபெல்தாமில் வசிக்கும் செளஜன்யா. இந்த மனப்பான்மை புள்ளிவிபரங்களிலும் எதிரொலிக்கிறது.
இங்கிலாந்தில், 2017ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆயிரம் ஆசியர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள். ஆனால், 79 ஆசியர்கள்தான் சிறுநீரகம் கொடை அளித்து இருக்கிறார்கள். 29 பேர் மட்டுமே இறந்த பின் கொடை அளித்து இருக்கிறார்கள்.

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை அமைப்பின் கணக்குப்படி, 2015 ஆம் ஆண்டு, உடல் உறுப்புக்காக காத்திருந்த 466 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். உடல் உறுப்புக்காக காத்திப்பவர்கள் பட்டியலிலிருந்து 881 பெயர்கள் நீக்கப்பட்டன. இவர்களில் பலர் அதன் பின் இறந்திருக்கலாம்.
சிறுநீரகம் தேவைப்படும் இன சிறுபான்மையினரின் எண்ணிக்கை, சராசரியைவிட அதிகமாக உள்ளது.
தேசிய சுகாதார சேவை அமைப்பின் கருத்துப்படி, கருப்பினத்தவர்கள், ஆசியர்கள், மற்ற பிற இன சிறுபான்மையினர் இங்கிலாந்து மக்கள் தொகையில் 11 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். 2016 - 17, நிதி ஆண்டு கணக்குப்படி, உடல் உறுப்புக்காக காத்திப்பவர்களில் 34 சதவிகிதம் பேர் இந்த இன சிறுபான்மையினர்தான்.
இந்து மக்களிட உடல் உறுப்புதானம் குறித்து உள்ள மனத்தடையை நீக்க வேலை செய்பவர் கிரித் மோடியும். அவர் பிபிசியை தன் இல்லத்திற்கு அழைத்து இருந்தார்.
மோடி குடும்பத்தினர் தங்கள் சொந்த வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பேச தொடங்கினார்கள். பல ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துமஸ் அன்று நடந்த நிகழ்வுகளை நினைவுக்கூர தொடங்கினார்கள்.
அந்த சமயத்தில் கிரித் மருத்துவமனையில் இருந்தார். அவரது இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து இருந்தன.
சிறு நீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளது, ஒன்று டையலாசிஸ் செய்ய வேண்டும் அல்லது உடல் உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கிரித் மோடி.
மோடி குடும்பம் ஒன்று கூடியது. மோடியின் சகோதரரும், மனைவியும், சிறுநீரகம் கொடையாக தரும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்று பரிசோதிக்கப்பட்டார்கள். அவரது சகோதரருக்கு உடல்நலக் கோளாறு இருந்தது.
அதனால், அவரால் தனது சிறுநீரகத்தை கொடையாக அளிக்க முடியவில்லை. ஆனால், மோடியின் மனைவி ஆரோக்கியத்துடன் இருந்தார். அவர் கொடை அளித்தார். இத்தருணம் அவர்களது குடும்பத்திற்கு கடினமான தருணம்.

"சிறுநீரகத்தை கொடையாக அளிப்பவருக்கும், அதை பெறுபவருக்கும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகமான ஆபத்துகள் உள்ளதாக நினைத்தோம். எந்த அறுவை சிகிச்சைகளும் ஆபத்து இல்லாதது ஒல்லை. இந்த அறுவை சிகிச்சை வெற்றிபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உயிருடன் இருப்பவர்களிடமிருந்து சிறுநீரகங்களை கொடையாக பெறுவது, இறந்தவர்களிடமிருந்து பெறுவதைவிட பல விதங்களில் நல்லது." என்கிறார் கிரிட்.
சிகிச்சைக்குப் பின் சில மாதங்களில் இருவரும் குணமடைந்துவிட்டார்கள். இப்போது இருவரும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இந்த தானத்தால் கிரித்துக்கு, என் மகள்களுக்கு, எனக்கும் நல்லதே. நான் சிறு நீரகத்தை கொடையாக அளித்ததற்காக ஒரு விநாடி கூட வருத்தப்படவில்லை என்கிறார் கிரித்தின் மனைவி மீனா.
மேலும் அவர், "பலர் உடல் உறுப்புக்காக பல ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். சிலர் 3 - 4 ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் உடல்நிலை மிக மோசமாக பாதிப்படைந்துவிடும். மனதார எனக்கு தெரியும் நான் என் குடும்பத்திற்கு செய்தது மிக நல்ல காரியம்."
இப்போது இந்தக் குடும்பம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த லண்டனில் வாழும் ஆசிய மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது."
ஒருவரின் வாழ்வை காப்பாற்றுவது மிக உன்னதமான காரியம் என்று சொல்லும் மீனா, "இது தான் நான் அளித்ததிலேயே மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு" என்கிறார்.
பிற செய்திகள்:
- பாகிஸ்தான் சிறுமி கொலை : 1,150 பேரின் டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு சந்தேக நபர் பிடிபட்டார்
- சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம்
- டீசல் வாகனங்கள் சூழலியலுக்கு கேடு என்பது உண்மையா?
- மலை கிராமத்தில் கூடும் உலகப் பணக்காரர்களும் தலைவர்களும்
- சாக்கடல் ரகசியம்: வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













