புற்றுநோயைக் கண்டறிய ஒரு ரத்தப்பரிசோதனை போதுமா? என்ன சொல்கிறது புதிய ஆய்வு?

புற்றுநோயை கண்டறியும் வழிமுறைகளில் ஒரு முக்கிய மைல் கல்லை அறிவியல் ஆய்வாளர்கள் எட்டியுள்ளனர்.

breast cancer cells

பட மூலாதாரம், Science Photo Library

எட்டு வகையான புற்றுநோய்களை ஒரே சோதனையில் கண்டறியும் வழிமுறை ஒன்றை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்றுவதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த முடிவு தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

'கேன்சர்சீக்' (CancerSEEK) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை, 16 வகையான ஜீன்களிலும், உடலால் வெளியிடப்படும் எட்டு வகையான புரதங்களிலும் புற்றுநோய் வரும்போது உருவாகும் மாற்றங்களை ஆராயும்.

இந்த சோதனை கல்லீரல், கணையம், நுரையீரல், வயிறு, சினைப்பை, மார்பகம், உணவுக்குழாய், பெருங்குடல் உள்ளிட்ட உறுப்புகளில் புற்றுநோய் உடைய 1,005 பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதிக்கப்பட்டது.

இந்த சோதனை 70% புற்றுநோய்களை கண்டறிந்தது. "இது புற்றுநோயைக் கண்டறியும் துறையில் மிகவும் முக்கியமான ஆய்வு. இது புற்றுநோய் உயிரிழப்புகளில் பெரும் தாக்கத்தை செலுத்தும்," என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டியன் டோமசெட்டி கூறியுள்ளார்.

Blood test

பட மூலாதாரம், Getty Images

சோதனைக்கு உள்படுத்தப்பட்ட எட்டு வகையான புற்றுநோய்களில் ஐந்துக்கு புற்றுநோயை முன்கூட்டியே அறியும் முறைகள் இல்லை.

எந்த தசையில் புற்றுநோய் உண்டாகிறது எனும் தகவலையும் இந்த ஆய்வு சில நேரங்களில் கண்டறிந்தது.

"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எவ்விதமான ஸ்கேனிங் மற்றும் கொலொனோஸ்கோப்பி (ஆசனவாய் மூலம் பெருங்குடலில் புற்றுநோயைக் கண்டறியும் சோதனை) சோதனைகளும் இல்லாமல் ஒரு ரத்தப்பரிசோதனை மட்டுமே புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும்," என்று லண்டனில் உள்ள இன்ஸ்டிட்டியூட் ஆப் கேன்சர் ரிசர்ச்-இந்த மருத்துவர் கெர்ட் அட்டர்டு கூறியுள்ளார்.

எனினும், புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தபின் என்ன செய்வது என்பது குறித்த தெளிவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "முன்கூட்டியே நாம் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துவிட்டதால் மட்டும் நாம் உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட முடியாது."

"புற்றுநோய் உடலில் பரவும் முன்பே அதைக் கண்டறிவது புற்றுநோய் மரணங்களை குறைக்க உதவும். தற்போது புற்றுநோய் கண்டறியப்படுவதற்கான நேரத்தை விட முன்கூட்டியே கண்டறிய இந்த ஆய்வு உதவும்," என்று கூறும் பேராசிரியர் ரிச்சர்டு மராய்ஸ் "இது புற்றுநோய் வருவதற்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அதைக் கண்டறிய உதவும் என்பதை நிரூபிக்க இன்னும் சில காலமாகும் என்கிறார்.

புற்றுநோய் மிகவும் ஆரம்பகட்ட நிலையில் இருக்கும்போது இந்த பரிசோதனை எந்த அளவுக்கு செயல்படுகிறது எனபதை அறிய வேண்டும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பால் பாரோ கூறியுள்ளார்.

புற்றுநோய்

பட மூலாதாரம், Science Photo Library

அவர் இவ்வாறு கூறுகிறார்,"பாதிப்புகள் அதிகாமாகியுள்ள சூழ்நிலையில் இந்த சோதனை புற்றுநோயைக் கண்டறிவதால் இவை ஆரம்ப நிலையிலும், அதற்கு முந்தைய நிலையிலும் இருக்கும் புற்றுநோயை இது கண்டறியும் என்று கூறமுடியாது. ஆரம்ப நிலையில் இருக்கும் புற்றுநோய்களில் 40%-ஐ மட்டுமே கண்டறிய முடியும்," என்று அவர் கூறியுள்ளார்.

"இது குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட சோதனை. இது பிற பொதுமக்களிடமும் சோதிக்கப்பட்டு அதன் பலனை மதிப்பிட வேண்டும்," என்று லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மங்கேஷ் தொராட் கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது தெரியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :