எகிப்து: துப்பாக்கி தாக்குதலில் மத சிறுபான்மையினர் 9 பேர் பலி
எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கில் உள்ள ஹெல்வான் மாவட்டத்தில், காப்டிக் கிறிஸ்தவர்கள் எனப்படும் வட ஆஃப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட கிறிஸ்தவ மதத்தவர்களைக் குறிவைத்து, ஒரே நபரால் நடத்தப்பட்ட இருவேறு தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
காப்டிக் கிறிஸ்தவர்கள் நடத்தும் கடை ஒன்றில் புகுந்த அந்தத் துப்பாக்கிதாரி சுட்டதில் இரு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். பின்பு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்த அந்த நபர் ஆறு பொதுமக்கள் மற்றும் ஒரு காவலரைச் சுட்டுக்கொன்றார் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது. அந்த நபர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அரசு தரப்பின்முரண்பட்ட தகவல்கள்
எகிப்து உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள தகவல்கள், இதற்கு முன்னதாக எகிப்து சுகாதர அமைச்சகம் வழங்கிய தகவல்களில் இருந்து வேறுபடுகின்றன.

பட மூலாதாரம், EPA
முதலில் வழங்கப்பட்ட தகவல்களில், இரண்டு நபர்கள் அந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், 12 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டார் என்றும், தப்ப முயன்ற இன்னொரு நபர் பிடிக்கப்பட்டார் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்கள் அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களால் கூறப்படும் தகவல்களுக்கு முரணாக உள்ளன. ஒரு துப்பாக்கிதாரி இறந்து கிடப்பதையும், இன்னொரு துப்பாக்கிதாரி சிகப்பு நிராக கார் ஒன்றில் தப்பிச் செல்வத்தையும் காணொளிகள் காட்டுகின்றன.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எகிப்து அதிபர் "அப்துல் ஃபட்டா அல்-சிசி," தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் நாட்டிலிருந்து நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்," என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் காப்டிக் சிறுபான்மையினர்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் எகிப்தின் மக்கள்தொகையில் காப்டிக் கிறிஸ்தவர்கள் 10% உள்ளனர். தங்களைப் பாதுகாக்க மேலோட்டமான நடவடிக்கைகளையே அதிகாரிகள் எடுப்பதாக அவர்கள் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஈஸ்டர் விழாவின் குருத்தோலை ஞாயிறன்று, அலெக்ஸ்சாண்ட்ரியா மற்றும் தாண்டா ஆகிய நகரங்களில், காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Reuters
ஒரு கிறிஸ்தவ மடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது கடந்த மே மதம் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர். சென்ற அக்டொபர் மாதம் தலைநகர் கெய்ரோவில் காப்டிக் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த அனைத்து தாக்குதல்களுக்கும் காரணம் இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புள்ளவர்களே என்று குற்றம் சாட்டப்படுகிறது.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












