லைபீரியாவின் புதிய அதிபராகும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்
பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தால் சீரழிந்த லைபீரியாவின் அதிபராகிறார் முன்னாள் கால்பாந்தாட்ட வீரர் ஜார்ஜ் வியா.

பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தால் சீரழிந்த லைபீரியாவில் எந்தவொரு சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று லைபீரிய துணை அதிபர் ஜோசப் பொக்காயின் பதவி காலத்தை குறிப்பிடலாம்.
அரசு விழாக்களின்போது தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவதாக கருதப்படும் ஜோசப் போக்காய் "ஸ்லீப்பி ஜோ" என்று கேலியாக அழைக்கப்படுகிறார்.
ஆனால் உண்மையில் தான் தூங்குவதில்லை என்றும் தனது முகத் தோற்றம் அப்படி இருப்பதாக ஜோசப் பொகாய் தன் மீதான 'தூங்கு மூஞ்சி' என்ற குற்றச்சாட்டை தீவிரமாக மறுக்கிறார்.
அதிபர் எல்லென் ஜான்சன் சிர்லீஃப்பின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த அதிபராக பதவியேற்கலாம் என்ற தற்போதைய துணை அதிபர் ஜோசப் பொகாயின் கனவு கலைந்துவிட்டது.

பட மூலாதாரம், AFP
வியாழன் அன்று நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கால்பந்தாட்ட வீர்ர் ஜார்ஜ் வியா அறுபது சதவிகித வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
யார் இந்த ஜார்ஜ் வியா?
தொழில்முறை கால்பாந்தாட்டக்காரரான ஜார்ஜ் வியா, செல்சீ மற்றும் மான்செஸ்டர் சிட்டி கிளப்களின் சார்பில் விளையாடினார்.
இவர் மட்டுமே ஃபீஃபாவின் ஆட்ட நாயகர் (FIFA World Player of the Year) மற்றும் மதிப்புமிக்க பேலன் டி'ஆர் (Ballon d'Or ) விருதை வென்ற ஒரே ஆஃபிரிக்க கால்பாந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
2002ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜார்ஜ் வியா அரசியலில் நுழைந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார் ஜார்ஜ் வியா.

பட மூலாதாரம், Getty Images
2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வியா, எல்லென் ஜான்சன் சிர்லீஃபியிடம் தோற்றுப்போனார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு எழுந்த கலகங்களால் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு 2006இல் எல்லென் ஜான்சனின் ஆட்சி தொடங்கியது.
போர்க் குற்றங்களுக்காக தற்போது பிரிட்டனில் 50 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்துவருகிறார் சார்லஸ் டெய்லர்.
லைபீரியா பற்றிய சில முக்கிய தகவல்கள்
•ஆஃப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லைபீரியா பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போரால் பீடிக்கப்பட்டிருந்தது.
•1820களில் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டில் அமெரிக்கர்கள் குடியேற்றப்பட்டனர். ஆஃப்ரிக்காவின் பழமை வாய்ந்த குடியரசாக 1847ஆம் ஆண்டில் லைபீரியா உருவானது.

பட மூலாதாரம், AFP
•சுதந்திரம் என்ற பொருளுடைய 'லிபர்ட்டி' என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது லைபீரியா என்ற பெயர்.
•ஒரு புறம் கடலும் மற்ற மூன்றுபுறங்களில் கினி, சியாரா லியோன், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளும் சூழ்ந்த தீபகற்ப நாடு லைபீரியா.
•லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லர் 1980 முதல் 1990 வரை வன்முறை கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். பின்னர் தேர்தலில் போட்டியிட்ட அவர் 1997இல் தேர்தலில் வென்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












