வடகொரியாவுடன் ஜவுளி உறவை துண்டித்த சீனா, எண்ணெய் வர்த்தகம் குறைப்பு

பட மூலாதாரம், AFP
அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வட கொரியாவுடன் எண்ணெய் வர்த்தகத்தைக் குறைத்து கொள்ளவும், அந்நாட்டிடமிருந்து ஜவுளி வாங்குவதை நிறுத்தவும் சீனா இன்று (சனிக்கிழமை) முடிவெடுத்துள்ளது.
வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும், அந்நாட்டின் நாணய மதிப்பின் ஒரே ஆதாரமாகவும் சீனா விளங்கி வந்தது.
ஜவுளி வர்த்தகம் மீதான தடை வட கொரியாவின் வருவாயை கடுமையாக பாதிக்கும். அதேசமயம், சீனாவின் எண்ணெய் ஏற்றுமதி வட கொரியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வந்தது.
வட கொரியா சமீபத்தில் நடத்திய அணுஆயுத சோதனையை தொடர்ந்து சீனா வட கொரியாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அணுஆயுத சோதனைக்கு பதிலடி தரும் வகையில் ஜவுளி மற்றும் பெட்ரோலிய கட்டுப்பாடுகள் உள்பட பல புதிய தடைகளுக்கு ஐ.நா அனுமதி வழங்கியிருந்து குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், REUTERS/KCNA
எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கா பரிந்துரைந்த ஒட்டுமொத்த தடைக்கு முதலில் சீனா மற்றும் ரஷ்யா எதிர்ப்புகளை தெரிவித்தன. பின்னர், கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
வட கொரியா தன் வசம் மிக குறைந்த அளவிலே ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால், வட கொரியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயிலிருந்து சில பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரிப்பு செய்கிறது. இவை வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய தடை உத்தரவுகளில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு மாதங்களில் வட கொரியாவில் பெட்ரோல் விலை சுமார் 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஏ எஃப் பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
''நேற்று பெட்ரோலின் விலை 1.90 டாலராக இருந்ததாகவும், இன்று 2 டாலராக இருந்ததாகவும்,'' அங்குள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பெட்ரோல் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












