வட கொரியா மீது தடைகளை விரிவாக்க புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து

வட கொரியாவின் அணு ஆயத திட்டத்திற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் புதிய ஆணை ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

டிரம்ப் மற்றும் டூன் ஜியே-இன்

பட மூலாதாரம், Reuters

வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொண்டு வருகின்ற நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க கருவூல துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொள்ளும் சீன வங்கிகளின் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள சீனாவின் சென்டல் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வட கொரியா நடத்திய மிகவும் சமீபத்திய அணு குண்டு சோதனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மாமன்றம் புதிய தடைகளை ஏற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களில் அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் வந்துள்ளன.

உலக நாடுகள் நிறுத்துவதற்கு அழுத்தங்கள் வழங்கியிருந்தாலும், சமீப வாரங்களில் வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகின்ற அணு ஆயுத மற்றும் பேலிஸ்டிக் சோதனைகளால் பதட்டம் அதிகரித்துள்ளது.

மனித குலத்திற்கு எதிரானதாக அறியப்படும் மிகவும் கொடிய ஆயுதங்களை உருவாக்கும் வட கொரியாவின் முயற்சிகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்படும் வருவாய் ஆதாரங்களை துண்டிப்பதற்காக இந்த தடை நடவடிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று புதிய செயலாணையை அறிவித்தபோது அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வட கொரியாவின் ஜவுளி துறை, மீன்பிடித் துறை, தகவல் தொடர்பு துறை மற்றும் தயாரிப்பு துறை ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் இந்த தடை நடவடிக்கையால் இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

வட கொரிய தலைவர்

பட மூலாதாரம், AFP

வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு சர்வதேச நிதி அமைப்பை தவறாக பயன்படுத்தி கொள்ள மிக நீண்ட காலமாக வட கொரியா அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"இந்த தடைகள் ஒரேயொரு நாட்டை இலக்கு வைக்கிறது. அந்த நாடு வட கொரியாதான்" என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

"வெளிநாட்டு நிதி சேவை நிறுவனங்கள் அமெரிக்காவோடு அல்லது வட கொரியாவோடு யாரோடு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்வது கண்காணிப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் அவை சேவை வழங்க முடியாது" என்று அமெரிக்க கருவூலக செயலர் ஸ்டீவக் மினுச்சின் பின்னர் செய்தியாளாகளிடம் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக செய்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பொது பேரவையில் அதிபர் டிரம்ப் ஆற்றிய முதலாவது உரையில், அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளி நாடுகளுக்கும் வட கொரியா அச்சுறுத்தாலாக அமைந்தால், அதனை முற்றிலும் அழித்து விடுவதாக உறுதிபட தெரிவித்தார்.

அத்தகைய உரையை ஆற்றியதற்கு தக்க விலையை டிரம்ப் கொடுக்க வேண்டியிருக்கும் என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சூளுரைத்துள்ளார்.

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டிரம்பை மனச்சோர்வு அடைந்துள்ளதாக தெரிவித்திருக்கும் கிம் ஜாங்-உன், அமெரிக்க அதிபரின் கருத்துக்கள் தன்னை அச்சுறுத்த அல்லது இந்த நடவடிக்கைகளை நிறுத்த செய்வதற்கு பதிலாக, வலுவூட்டியுள்ளதாகவும், தான் தெரிந்தெடுத்திருக்கும் பாதையே சரியானது, அதையே கடைசி வரை பின்பற்றப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவை மறைமுகமாக தாக்கி பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப், வட கொரிவின் அணு குண்டு சோதனைக்கு எதிராக "ராணுவ வெறியை" காட்ட தொடங்கினால் "பேரழிவு" ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றத்தை எச்சரித்திருக்கிறார்.

வட கொரியா தவறான திசையில் செல்லக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அறிவுறுத்தியுள்ளார்.

"வட கொரியா அல்லது தென் கொரியா, எந்த நாடாக இருந்தாலும், கெரிய தீபகற்பத்தில் புதிதாக அணு ஆயுதங்கள் கூடாது" என்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் வாங் யி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் 193 உறுப்பு நாடுகள் ஒன்றுகூடி வருகின்ற ஆண்டு நிகழ்வான அதன் பொது பேரவை கூட்டத்திற்கு மத்தியில் தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :