You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பான் வான்வெளியில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
ஜப்பானின் வடக்கு பகுதிக்கு மேல் வட கொரியா மீண்டும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வானில் ஏவியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் தெரிவித்துள்ளன.
அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும், 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பசிஃபிக் பெருங்கடலில் சென்று விழுவதற்கு முன்பு, அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேல் உள்ள வான்வெளியில் பறந்துள்ளது.
வட கொரியாவின் இத்தகைய ஆபத்தான செயல்களை ஜப்பான் 'ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது' என்று கூறியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, "இதே வழியில் வட கொரியா தொடர்ந்து பின்பற்றினால், அந்நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது," என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் இதே போன்று வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்றதை 'முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்' என்று ஜப்பான் கூறியிருந்தது.
இந்த ஏவுகணை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கும் சற்று முன்னதாக ஏவப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29 அன்று ஏவப்பட்ட ஏவுகணையை விட, இந்த ஏவுகணை அதிக உயரத்தில் பறந்ததுடன் மட்டுமல்லாது அதிக தூரமும் பயணித்துள்ளது. சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்த முந்தைய ஏவுகணை 2,700 கிலோ மீட்டர் தூரம் வானில் பறந்து சென்று கடலில் விழுந்தது.
இது, வட கொரியா ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியத்தைத் தொடர்ந்து, ஐ.நா அந்நாடு மீது தடைகள் விதித்ததன் பின்னர் வட கொரியா மேற்கொள்ளும் முதல் ஏவுகணை சோதனையாகும்.
வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து 3,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, அமெரிக்காவின் பசிஃபிக் பிராந்தியமான குவாம் தீவை தாக்குவதற்கு இந்த ஏவுகணையின் தூரம் போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சோதனை, ஜப்பானைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள 'பொறுத்துக்கொள்ள முடியாத' நிகழ்வு என்று அந்நாட்டு அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியுள்ளார்.
தங்கள் நாடு மேற்கொண்டு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளும் என்று ஏற்கனவே வட கொரியா கூறியிருந்தது.
ஐ.நா விதித்துள்ள தடைகளைத் தொடர்ந்து, ஜப்பானை மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவை சாம்பலாகப்போவதாகவும் வியாழனன்று வட கொரியா மிரட்டல் விடுத்திருந்தது.
வட கொரியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, 'கிழக்கு கடல்' என்று அழைக்கப்படும் ஜப்பான் கடலில் கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கான பயிற்சியை நடத்திய தென் கொரியா, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தையும் கூட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று, வெள்ளிக்கிழமை, அவசரமாக கூடவுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய, அணு குண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததாக வட கொரியா கூறியிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்