You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அணு ஆயுத சோதனை 'வெற்றி' : வட கொரியா அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
வட கொரிய பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதை நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள் கண்டறிந்த சில மணி நேரத்தில், தங்களின் ஆறாவது அணு ஆயுத சோதனை வெற்றியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.
முன்னதாக, வட கொரியாவில் ஒரு பெரிய நில நடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை நடத்தியிருக்கலாம் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது.
வட கொரியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவித்த அமெரிக்க நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள், இதனால் ஒரு அணு ஆயுத சோதனை நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியிருக்கக்கூடும் என்ற நிலையில், அதன் அண்டை நாடுகள் இது குறித்து துரித நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
வட கொரியாவின் மற்றொரு அணு ஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வர்ணித்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனை பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உடனடியாக தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தென் கொரியா கூட்டியுள்ளது.
சீனாவின் பூகம்ப நிர்வாக அமைப்பு இந்த நிலநடுக்கத்தை சந்தேகிக்கப்படும் அணு ஆயத வெடிப்பு என்று வர்ணித்துள்ளது.
புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள சில மணி நேரங்களில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணு ஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த கூற்றுகளை தன்னிச்சையான முகமைகள் எதுவும் இதுவரை உறுதிசெய்யவில்லை.
அண்மைய மாதங்களில் பல் ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.
தொடர்பான செய்திகள்:
அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஜப்பானும், மற்ற பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இதற்கு பதிலளித்த வட கொரியா, ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்