You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா
ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.
வட கொரியாவின் அரசு ஊடகமும் பசிஃபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மீண்டும் கூறியுள்ளது. அத்தீவை 'நவீன ஆக்கிரமிப்புத் தளம்' என்று வட கொரியா வர்ணித்துள்ளது.
செவ்வாயன்று வட கொரியா ஏவிய ஏவுகணை, கடலில் சென்று விழுவதற்கு முன்பு ஜப்பானின் வடக்கே உள்ள ஹொக்கைடோ தீவைக் கடந்து சென்றது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொது மக்களிடையே ஒரு எச்சரிக்கையை உணர்வைத் தூண்டியது.
நியூ யார்க்கில் செவ்வாய் இரவு கூடிய ஐ.நா பாதுகாப்பு சபையும் இந்தச் செயலுக்காக வட கொரியாவை ஒருமனதாகக் கண்டித்துள்ளது. இத்தகைய 'மூர்க்கத்தனமான' சோதனைகளை வட கொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு சபை கூறியுள்ளது.
இத்தைகைய நடவடிக்கைகள் அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல் என்று அதன் அறிக்கை கூறினாலும், வட கொரியாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.
ஐ.நா சபையின் விதிகளுக்கு எதிராக சமீப மாதங்களில், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வந்தாலும், வட கொரியா அமைந்துள்ள பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளும் இப்பிரச்சனைக்கு காரணம் என்று ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
செவ்வாயன்று கொரிய நேரப்படி அதிகாலையில் வட கொரியா ஏவிய, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாசோங் - 12 எனும் அந்த ஏவுகணை மிகவும் தாழ்வாகப் பறந்து 2,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, ஜப்பானின் கிழக்கு கடல் எல்லையில் இருந்து 1,180 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று கடலில் விழுந்தது.
முதன் முறையாக வட கொரிய தரப்பும் ஜப்பான் வான்வெளியில் வேண்டுமென்றே ஏவுகணைகளை ஏவியதை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ஏவப்பட்டவற்றை செயற்கைக்கோள்கள் என்று அந்நாடு கூறிவந்தது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா தற்போது நடத்திவரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு நேரடி பதில் என்றும், 1910-ஆம் ஆண்டு ஜப்பான்-கொரியா உடன்படிக்கை மூலம் கொரிய தீபகற்பத்தை ஜப்பான் இணைத்துக்கொண்ட ஆண்டு விழாவை அனுசரிக்கும் விதமாகவும் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது ஒரு உண்மையான யுத்தம் போன்றது என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளின் தொடக்கம் என்றும் குவாம் பகுதியில் அமரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான முன்னோட்டம் என்றும் இது பற்றிக் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியைக் குறிவைத்து பல ஆயுத சோதனைகள் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஒரு முக்கியமான ராணுவத் தலமான குவாமில் சுமார் 1,60,000 அமெரிக்கர்கள் வசிக்கின்றனர்.
"வட கொரியா ஆயுத சோதனைகள் மூலம் விடுத்துள்ள இச்செய்தி உலகத்துக்கு உரக்கவும், தெளிவாகவும் கேட்டுள்ளது," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் வட கொரியாவைத் தனிமைப்படுத்தும் என்றும் அந்நாடு மீதான அனைத்து சாத்தியங்களும் விவாத மேசை மீது தயாராக உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :