You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னாப்பிரிக்காவில் நரமாமிசம் உண்ட விவகாரத்தில் 5 பேர் கைது
- எழுதியவர், நோம்சா மசேகோ
- பதவி, பிபிசி
தென்னாப்பிரிக்காவின் க்வாஜுலு-நடால் பகுதியில் ஷாயாமோயா கிராமத்தில் தலையில்லாத சடலம் கிடைத்துள்ளதை அடுத்து பரபரப்பு தொற்றிகொண்டது.
25 வயது 'ஜானெல் லாஷ்வேயோ' ஜூலை மாதத்தில் இருந்து காணவில்லை. அவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக காவல்துறை ஐந்து பேரை கைது செய்துள்ளது.
பரம்பரை நாட்டு வைத்தியர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நர மாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர் என்பதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜானெலின் சடலம் கைப்பற்றப்பட்டது.
அடையாளம் காட்டிய கைகால்கள்
தொடக்கத்தில் காவல்துறை அதிகாரிகள் இந்தத் தகவலை நம்பவில்லை. ஆனால், ரத்தம் தோய்ந்த கைகால்களை கண்டெடுத்ததும் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
அவர் குடியிருந்த வாடகை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிர்ச்சி மேலும் அதிகரித்தது. உணவு சமைக்கும் பாத்திரம் ஒன்றில் எட்டு மனித காதுகள் வைக்கப்பட்டிருந்தன.
குற்றவாளி தன்னுடைய வாடிக்கையாளருக்கு கொடுப்பதற்காக இவற்றை வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. நர மாமிசம் சாப்பிடுவதால் செல்வம், சக்தி, வலிமை கூடும் என்று வாடிக்கையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.
அங்கிருந்த சூட்கேஸில் மனித உடலின் வேறு பல பாகங்களும் ஆடைகளும் இருந்தன. போலீசார் கைப்பற்றிய ரத்தம் தோய்ந்த உடைகள் ஜானெலுடையது என்று அவர் குடும்பத்தினர் அடையாளம் காட்டினார்கள்.
இருந்தபோதிலும், ஜானெலின் உடல் பாகங்களே சூட்கேஸில் இருந்தது என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, முடிவுகள் இன்னமும் வரவில்லை.
ஜானெலின் உடல் பாகங்கள் இன்னும் புதைக்கப்படவில்லை. ''தனது இறுதி நிமிடங்களில் உயிருக்காக தம்பி எப்படி மன்றாடியிருப்பான் என்று நினைத்தால் அழுகையை அடக்கமுடியவில்லை. அவனுடைய இறுதி நிமிடங்கள் மிகவும் வலி மிகுந்ததாக இருந்திருந்திருக்கும்'' என்று கண்ணீருடன் சொல்கிறார் சகோதரி நோஜிஃபோ எண்டேலேலே.
''தம்பியின் ஆடைகளில் புல்லும், மண்ணும் படிந்திருப்பது, அவன் உயிரை காப்பாற்ற போராடியிருப்பதை காட்டுகிறது'' என்கிறார் அவர்.
'மாமிசம் நாற்றம் வீசுகிறது'
குற்றம்சாட்டப்பட்ட நாட்டு மருத்துவர் 'மோன்யோவூ', எஸ்கார்ட் அருகே உள்ள அன்ஸ்பர்க்ட்ரிஃப்ட்டில் வசித்து வந்தார். ஜுலூ மொழியில் 'மோன்யோவூ' என்றால் 'ஊழல்' என்று பொருள்.
இந்த வீட்டின் சொந்தக்காரர் ஃபிலானியின் சகோதரரும் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
'என் இளைய சகோதரன் பிறரின் தூண்டுதலால் தவறு செய்வான் என்பதை நம்பவே முடியவில்லை. அவனும் என்னைப் போன்றே ஏழைதான். புகழும் பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டு அவன் திசைதிருப்பப்பட்டிருக்கிறான்' என்கிறார் ஃபிலானி.
அங்கிருந்து உடல் அழுகிய துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் புகார் கூறியதாகவும் ஃபிலானி சொல்கிறார்.
'மோன்யோவூ' இரண்டு மாதங்களாக இங்கு வாடகைக்கு குடியிருக்கிறான். அவன் மனிதர்களின் உடலை துண்டுகளாக்கி வீட்டில் வைத்திருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் வேறு பகுதியில் வசிக்கிறேன் என்கிறார் ஃபிலானி.
கைதுகள் தொடருமா?
'மோன்யோவூ', ஃபிலானியின் சகோதரன் மற்றும் வேலையில்லா மூன்று பேரை தன்னுடன் வைத்திருந்ததாக ஃபிலானி கூறுகிறார். 'மந்திர தாயத்து' செய்வதற்காக புதைக்கப்பட்ட சடலங்களை நள்ளிரவில் தோண்டியெடுக்கவேண்டும் என்பது அந்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்துக்கு வெளியே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.
கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் மாத இறுதியில் அவர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் கைது செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :