You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரருக்கு 50,000 ரூபாய் பரிசு
- எழுதியவர், ஷுரைஹ் நியாஜி
- பதவி, பிபிசி
மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாவட்டம் சிதெளரா கிராமம். வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் ஒரு வெடிகுண்டு இருப்பதை மாணவர்கள் கண்டனர்.
பிற்பகல் 12.50 மணிக்கு அவசர எண் 100க்கு போன் மூலம் தகவல் சொல்லப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சுர்கி காவல்நிலையத்தின் 'டயல் 100' சிறப்பு சேவைக்கு உத்தரவு கிடைத்த சமயத்தில், அப்பிரிவின் வாகனம் பள்ளிக்கூடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் 'பேர்கேடி' கிராமத்தின் அருகில் இருந்தது.
இருந்தபோதிலும் 1.08 மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு விரைந்துவந்தது. அதில் போலீஸ்காரர் அபிஷேக் படேலும், அவரது இரண்டு சகாக்களும் இருந்தனர்.
ஆபத்தை கையில் எடுத்த அபிஷேக்
பள்ளிக்கூடத்தை சென்றடைந்த அபிஷேக் முதலில் அனைவரையும் வெளியேற்றினார். அந்த சமயத்தில் பள்ளியில் 400 குழந்தைகள் இருந்தனர். அருகில் ஒரு குடியிருப்புப் பகுதியும் உள்ளது.
யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று தன் உயிரை பணயம் வைக்க முடிவெடுத்த அபிஷேக் வெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடினார். 10 கிலோ எடைகொண்ட அதை எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவு ஓடி, அங்கிருந்த ஒரு மைதானத்தில் வெடிகுண்டை வீசினார்.
"குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. அவர்களிடம் இருந்து வெகுதொலைவுக்கு வெடிகுண்டை எடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் அந்த நேரத்தில் எனக்கு தோன்றியது" என்று அபிஷேக் படேல் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களின் முகங்கள் அச்ச உணர்ச்சியில் உறைந்திருந்ததாக அபிஷேக் கூறுகிறார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பன்னாத் கிராமத்திலும் இதேபோல் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக அவர் சொல்கிறார். அந்த வெடிகுண்டை ராணுவமும், போலீசாரும் இணைந்து செயலிழக்கச் செய்தனர். ஆனால் வெடிகுண்டு எவ்வளவு ஆபத்தானது என்று அப்போது மக்கள் தெரிந்துக் கொண்டார்கள். இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் ஒரு போலீஸ்காரர் செய்யவேண்டிய கடமையையே தானும் செய்ததாக 32 வயது அபிஷேக் கூறுகிறார்.
5 வயது மகள் மற்றும் 2 வயது மகனுக்கு தந்தையான அபிஷேக்கின் கண்முன் நூற்றுக்கணக்கான உயிர்கள் மட்டுமே தெரிந்தன. அவர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கருதவில்லை.
அபிஷேக்குக்கு கிடைத்த பாராட்டுகள்
தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் 400 குழந்தைகள் உள்ளிட்ட பலரை காப்பாற்றிய அபிஷேக்கின் வீரத்தையும், துணிச்சலையும் பாராட்டிய மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளகான், 50 ஆயிரம் ரூபாய் பரிசளித்து கெளரவப்படுத்தினார். முதலமைச்சரின் கையால் பரிசு பெற்றதால் மகிழ்ச்சியாக இருக்கும் அபிஷேக், இது தன்னுடைய அர்ப்பணிப்புமிக்க பணிக்கு கிடைத்த மரியாதை என்று கூறுகிறார்.
அபிஷேக் படேலின் மனைவி ரீனா படேல் இது பற்றிக் கூறியபோது, "இந்த சம்பவம் நடந்தபோது இது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது தெரியவந்தபோது மகிழ்ச்சியடைந்தோம். அனைவரும் அவரை பாராட்டுவது பெருமையாக இருந்தது. ஆனால் தவறாக எதாவது நடந்திருந்தால் எங்களின் நிலை என்ன என்று நினைக்கும்போது அச்சமாக இருந்தது" என்கிறார்.
எதுஎப்படியோ, இவ்வளவு குழந்தைகளைக் காப்பாற்றியது பெருமையாக இருப்பதாக ரீனா சொல்கிறார்.
எங்கிருந்து வந்தது இந்த வெடிகுண்டு?
இந்த வெடிகுண்டு ராணுவத்தை சேர்ந்தது என்று கூறும் போலீஸார், இது வெடித்திருந்தால் 500 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றும் கூறுகின்றனர்.
அருகே, ராணுவத்தினர் துப்பாக்கிப் பயிற்சி செய்யும் இடத்தில் இருந்து இது வந்திருக்கலாம். பள்ளிக்கூடத்திற்கு இந்த வெடிகுண்டு எப்படி வந்து சேர்ந்தது என்பது பற்றிய விசாரணை நடைபெறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :