You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒவ்வாமை தடுப்பு மருந்து `மாரடைப்பை தடுக்குமா?`
ஒவ்வாமை தடுப்பு மருந்துகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும் என 10 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனகினுமப் (canakinumab) எனும் ஒரு மருந்தை சோதித்த போது, சிகிச்சையில் இது பெரும்பங்காற்றியுள்ளது என்றும் ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட அந்த மருந்தின் மூலம் நோயாளிகளுக்கு மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதை 15% குறைக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால், அந்த மருந்தின் பலன், பக்கவிளைவுகள் மற்றும் அதற்கான கட்டணம் குறித்தும் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த மருந்தை எடுத்துக் கொண்ட நோயாளிகள் கடுமையான நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்கள்.
இருப்பினும், பிரித்தானிய இதய அறக்கட்டளை (British Heart Foundation -BHF) "மிகவும் எதிர்பார்த்திருந்த மற்றும் நீண்ட காலமாக நடத்தப்பட்ட சோதனை" உயிர்களை காப்பாற்றும் என்று தெரிவித்துள்ளது.
கீல்வாதம் மருந்து
மாரடைப்பு நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க, கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ரத்த அடர்த்திக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இந்த ஆய்வில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் நோயாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த மருந்து வழங்கப்பட்டது.
40 நாடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும், ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரும் 4 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.
இந்த மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டும் தான் மாரட்டைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்தது என ஆய்வை நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பின் முன் இந்த ஆய்வின் முடிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தம் திடீரென தடையாகும் போது உண்டாகும் மாரடைப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிரமான நோயாகும்.
ரத்தக் குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கும், மாரடைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், மனிதர்கள் மத்தியில் இது நிரூபிக்கப்படவில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரும், பிரிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையின் மருத்துவருமான பால் ரிட்கெர், இந்த ஆய்வு குறித்து கூறுகையில், "நீண்ட பயணத்தின் மைல்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இது நீண்ட கால தாக்கங்களை கொண்டுள்ளது" என்றும் "என்னுடைய வாழ்நாளில் இதய நோய்களை தடுக்கும் மூன்று பெரிய சகாப்தங்களை பார்த்து விட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
"முதலில், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். இரண்டாவதாக கொழுப்பை குறைக்கும் மிக முக்கிய மருந்துகளை பார்த்தோம். தற்போது, மூன்றாவது சகாப்தத்தின் கதவை திறந்துள்ளோம். இது மிகவும் அற்புதமானது" என்றும் மருத்துவர் பால் ரிட்கெர் கூறியுள்ளார்.
`பாதுகாப்பு சமரசம்`
ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருந்துவர் ராபர்ட் ஹாரிங்டன், நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆஃப் மெடிசின் எனும் பத்திரிக்கையில் எச்சரிக்கை குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
ஒவ்வாமை தடுப்பு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பலன் மற்றும் பாதுகாப்பு சமரசங்களை உணராத வரை இதன் விளைவுகளை நியாயப்படுத்த முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை உபயோகிக்காத நபர்களுக்கு சிகிச்சை மூலம் மட்டும் தான் தொடர் மாரடைப்பிற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பதே மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்