'இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டும்' : அர்ஜுன ரணதுங்க

பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை கிரிக்கெட் துறையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் நடைபெற்ற போட்டிகளின் போது பெரும் தோல்விகளை கண்டுள்ள நிலையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்குள் காணப்படுகின்ற சீர்குலைந்த நிர்வாகம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அர்ஜுன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் தொடர்பாக திறமை மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர் பதவிகளை வகித்து வருகின்ற காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறியுள்ள ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் துறையை காக்க வேண்டுமானால் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் கிரிக்கெட் துறையின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுபவம் கொண்ட நபர்கள் உள்ள ஆணைக்குழுவொன்று இல்லாவிட்டால் இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைத்து கிரிக்கெட் நிர்வாகத்தை முன் கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அர்ஜுன ரணதுங்க தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :