You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரைப்பட விமர்சனம்: துப்பறிவாளன்
ஆர்தர் கொனான் டாயிலின் சாகாவரம் பெற்ற பாத்திரமான ஷெர்லக் ஹோம்ஸ் சாகசங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்று இயக்குனர் மிஷ்கின் ஏற்கனவே சொல்லிவிட்டார். படத்தின் துவக்கத்திலும் ஆர்தர் கொனான் டாயிலுக்கும் நன்றி தெரிவிக்கிறார். ஆக படத்தின் துவக்கத்திலேயே ஷெர்லக் ஹோம்ஸ் பாணியிலான ஒரு துப்பறியும் கதைக்கு நம்மை தயார் செய்துவிடுகிறார் மிஷ்கின்.
கணியன் பூங்குன்றன் (விஷால்) ஒரு தனியார் துப்பறிவாளர். ஷெர்லக்கிற்கு வாட்ஸனைப் போல கணியனின் நண்பர் மனோ (பிரசன்னா). சுவாரஸ்யமான வழக்கு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும் கணியன், நாய் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு ஒன்றை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, அது மிகப் பெரிய சதிவலையின் ஒரு கண்ணி என்பது புரிய ஆரம்பிக்கிறது.
கூலிக்காக கொலைகளைச் செய்யும் மிகப் பெரிய கும்பல் ஒன்று நாயின் கொலைக்குப் பின்னால் இருப்பது தெரியவருகிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து, தலைவனை நோக்கி கணியன் நகர, நகர பல கொலைகள் நடக்கின்றன. கணியனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
தமிழில் ஏற்கனவே பல துப்பறியும் கதைகள் வந்திருந்தாலும் அப்படியே ஷெர்லக் ஹோம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்ட முதல் படம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அந்தக் கதைகளில் வாட்ஸன் இருப்பதைப் போலவே துப்பறிவாளருக்கு ஒரு நண்பர், கதைகளில் வரும் கொலைகளில் வித்தியாசமான விஷங்களைப் பயன்படுத்துவது, கொலை என்று தெரியாமல் இருப்பதற்காக விபத்துகளைப் போல கொலைகளை ஏற்பாடு செய்வது என பல சுவாரஸ்யமான அம்சங்கள் படத்தில் தென்படுகின்றன.
தவிர, துப்பறிவாளரின் வீட்டை ஷெர்லக் ஹோம்ஸின் அறையைப் போல வடிவமைத்திருப்பதும் கூடுதல் சுவாரஸ்யம். வெவ்வேறு விதமான ரசாயனங்களைப் பயன்படுத்துவது, விஷத்தைப் பயன்படுத்துவது, மின்னலை உருவாக்கிக் கொலை செய்வது என ஒரு விக்டோரியா காலத்து துப்பறியும் கதைக்குத் தேவையான அம்சங்கள் படத்தில் நிறையவே இருக்கின்றன.
பிற செய்திகள்:
ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் ஃபிலிப் ஆண்டர்சன் என்று ஒரு பாத்திரம் வரும். ஃபிலிப் ஒரு தடயவியல் அறிஞர். ஆனால், ஷெர்லக்கிற்கும் ஃபிலிப்பிற்கும் ஆகாது. பல தருணங்களில் உதவி செய்ய மறுப்பார். இந்தப் படத்திலும் தடயவியல் துறையில் பணியாற்றுபவர் வேண்டாவெறுப்பாக கணியனுக்கு உதவுகிறார். இவையெல்லாம் ஒவ்வொரு தருணத்தில் படத்தோடு நம்மை ஒன்றிப்போக வைக்கின்றன.
ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சனை காட்சிகளிலும் சில பாத்திரங்களிலும் இயல்பு தன்மையே இல்லாமல் இருப்பதுதான். கதாநாயகனாக வரும் கணியன் பல காட்சிகளில் தாறுமாறாக நடந்துகொள்கிறார். வேறு சில பாத்திரங்களும் சில சந்தர்ப்பங்களில் இதுபோல நடந்துகொள்கிறார்கள். மிஷ்கினின் படங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் பிரச்சனை இது.
பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் இல்லாத இந்தப் படம் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீள்கிறது. பல காட்சிகளின் நீளம் படத்தின் வேகத்தையும் விறுவிறுப்பையும் குலைக்கிறது. காட்சிகளை அடுக்கியிருக்கும் விதம் சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். புத்திசாலித்தனத்தை வைத்து புதிரை விடுவிக்கும் ஒரு கதையின் உச்சகட்டத்தில், கதாநாயகன் வில்லனை அடித்து வீழ்த்துவதுபோல படம் முடிவது பொருத்தமாக இல்லை.
கணியன் பாத்திரத்தில் வரும் விஷால், முன்பே குறிப்பிட்டதைப் போல நாடகத்தனத்துடன் கூடிய நடிப்பையே வெளிப்படுத்துகிறார். வில்லனாக வரும் வினய், பாக்கியராஜ் ஆகியோர் அவர்களுடைய பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு எதையும் சேர்க்கவில்லை.
கணியனின் நண்பர் பாத்திரத்தில் வரும் பிரசன்னாதான் படம் முழுக்க இயல்பாக வரும் ஒரே நடிகர். ஹீரோவின் கூடவே வரும் பாத்திரம் என்றாலும், இந்த இயல்புதன்மையின் காரணமாகவே ரசிக்க வைக்கிறார் அவர்.
கதாநாயகியான அனு இமானுவேல், வில்லியாக வரும் ஆண்ட்ரியா ஆகியோருக்கு மற்றும் ஒரு படம். படத்தின் இசையமைப்பாளர், கலை இயக்குனர் ஆகியோர் குறிப்பிட்டு பாராட்டத்தக்கவர்கள்.
இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மீறி, துப்பறியும் கதைகளை ரசிப்பவர்களுக்கு படம் மிகவும் பிடிக்கக்கூடும்.
தவிர, தமிழ் சினிமாவில் இந்த பாணி துப்பறியும் கதைகளுக்கு ஒரு துவக்கமாகவும் இருக்கக்கூடும்.
பிற செய்திகள்:
- இந்தி தினம்: தமிழகம் இப்போது எப்படிப் பார்க்கிறது?
- எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை
- ஐ-போனின் புதிய அவதாரம் தூண்டிய சமூக ஊடக சலசலப்பு
- மலேசிய பள்ளியில் தீ விபத்து: 24 பேர் பலி
- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்: 5 சிறப்பு அம்சங்கள்
- ரோஹிஞ்சாக்கள்: நிலை தடுமாறுகிறதா இந்தியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்