You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்: 5 சிறப்பு அம்சங்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தொடங்கி வைத்தார்.
மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே செல்லும் இந்த புல்லட் ரயிலுக்கு தேவைப்படும் நிதி பெரும்பாலும் ஜப்பான் வழங்கும் கடன் மூலம் பெறப்பட்டது. இதற்காக 17 பில்லியன் டாலர்கள் நிதியினை ஜப்பான் கடனாக அளித்துள்ளது.
இன்றைய புல்லட் ரயில் திட்ட அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய ஷின்சோ அபே பேசுகையில், ''னது நல்ல நண்பர் பிரதமர் நரேந்திர மோதி தொலைநோக்கு பார்வையுடன் உள்ளவர். இந்தியாவில் மிக அதிவேக ரயில்களை கொண்டுவரும் முடிவை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தார்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த புல்லட் ரயிலின் முக்கிய சிறப்பு அம்சங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
- 500 கிலோமீட்டர் தொலைவு உள்ள மும்பை - அகமதாபாத் வழித்தடத்தை கடக்க வழக்கமாக ஆகும் 8 மணி நேரம். இந்த புல்லட் ரயில் பயணத்தில், இது 3 மணிநேரமாக குறையவுள்ளது. மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் 12 ரயில் நிலையங்கள் இருக்கும்.
- புல்லட் ரயில் வழித்தடத்தில் பெரும்பான்மையான பகுதி பூமிக்கு மேல் மேம்பாலத்தில் அமைந்திருக்கும். 7 கிலோமீட்டர் அளவிலான ஒரு சிறிய பகுதி மட்டும் கடல் மட்டத்துக்கு கீழ் சுரங்கப்பாதையில் அமைந்திருக்கும்.
- இந்த புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர் ஆகும். இது தற்போது இந்தியாவில் ஓடும் வேகமான ரயில்களின் அதிகபட்ச வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
- வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஓட திட்டமிடப்பட்டுள்ள இந்த புல்லட் ரயிலில் 750 இருக்கைகள் இருக்கும்.
- பயணிகளின் வசதிகள் மேம்பாடு, பெரு நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி குறைப்பு, அதிக வணிக வாய்ப்புகள் மற்றும் புல்லட் ரயில் வழித்தடத்தில் உள்ள பொது கட்டமைப்புகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு அதிவேக புல்லட் ரயில்கள் வழிவகுக்கும் என்று புல்லட் ரயில் திட்டத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் ரயில் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப் போவதாக வாக்களித்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தனது 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் புல்லட் ரயில் திட்டத்தை ஒரு முக்கிய வாக்குறுதியாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்