அடிமைத்தனத்துக்கு ஆதரவான சிலைகளை அகற்றியதற்கு டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவில் இனங்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பாக காரசார விவாதம் நடந்து வருவதற்கு மத்தியில், அங்கு சில மாநிலங்களில் அடிமைத்தனத்துக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுவதை ஏற்க முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தமது டிவிட்டரில், "நம் நாட்டின் அழகிய சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் அகற்றியதன் மூலம் மிகச் சிறந்த நாட்டின் வரலாறும் கலாசாரமும் சிதறடிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

"வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவெறியைத் தூண்டும் வகையில் அந்த சிலைகளில் ஒன்றை அகற்றுவதற்கு எதிராக வர்ஜீனிய மாநிலத்தின் சார்லட்ஸ்வில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வலதுசாரி குழுக்கள் பேரணி நடத்தின.

இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விமர்சித்து அவர் வெளியிட்ட கருத்துகள் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகின.

ஆனால், வெள்ளையின குழுக்களுக்கும் அதன் எதிர் தரப்புக்கும் இடையே தார்மிக சமநிலையை எட்டுவதற்காக தாம் அவ்வாறு செயல்பட்டதாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்நாட்டுச் சண்டை நடந்த காலத்தில், அடிமைத் தனத்துக்கு ஆதரவாகப் போராடிய ஜெனரல் ராபர்ட் இ லீயின் சிலையை அகற்றப்பட்டதை எதிர்த்து, நாஜிக்கள் ஆதரவு மற்றும் வெள்ளையினவாத குழுவினரால் வர்ஜீனியா மாநிலத்தின் சார்லோஸ்ட்ஸ்வில்லியில் போராட்டம் நடைபெற்றது.

அங்கு போராட்டக் குழுவினருக்கு எதிரான கூட்டத்தில் சிக்கிய ஓட்டுநர் ஹீத்தர் ஹேயர் உயிரிழந்தார்.

இந்நிலையில் டிரம்ப் வியாழக்கிழமை தமது டிவிட்டர் பக்கத்தில் "ராபர் இ லீ, ஸ்டோன்வால் ஜேக்சன் - அடுத்தது யார்? வாஷிங்டன், ஜெஃபர்சன்? மிகவும் முட்டாள்தனமானது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

நமது நகரங்கள், பூங்காக்களில் இருந்து அகற்றப்பட்ட அழகுக்கு இணையாக ஒரு போதும் ஈடு செய்ய முடியாது" என்றும் அவர் கூறியுள்ளார்.

அடிமை முறைக்கு ஆதரவான நினைவச் சின்னங்கள் இனவெறியை தூண்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், நாட்டின் தென்னக பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் அச்சிலைகள் முக்கியமானவை என்று ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளவரான ஸ்டோன்வால் ஜாக்சனின் உறவினர்களான ஜாக் மற்றும் வாரன் கிறிஸ்டியன் ஆகியோர் வர்ஜீனியாவில் உள்ள ரிச்மண்ட் மேயருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "எங்களின் மூதாதையர் வழி தாத்தாவின் சிலை மட்டுமின்றி, அடிமைத் தனத்துக்கு ஆதரவாக செயல்பட்ட அனைத்துத் தலைவர்களின் சிலைகளையும் அகற்றுங்கள்" என்று கூறியுள்ளனர்.

"எங்களின் முன்னோர் வழி தாத்தாவை நினைத்து நாங்கள் அவமானப்படவில்லை. எங்களின் கருப்பு இன நண்பர்கள் துயரப்படும் வேளையில், வெள்ளையின ஆதிக்கவாதிகளிடம் இருந்து நாங்கள் பலன் அடைய அவமானப்படுகிறோம்" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நகரில் சிலைகள் அகற்றப்படுவதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையை கான்ஃபடரேட் ஜெனரலின் தலைமுறையில் உள்ள பேரன் ராபர் இ லீ வி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், "நமது கடந்த காலங்களை நினைவுபடுத்தும் நபர்கள் பற்றி நாம் விவாதிக்கும் வேளையில், ராபர் இ லீயின் வழிவந்த குடும்பத்தினரான நாங்கள், சகிப்புதன்மையற்ற மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுவதற்காக அந்த நினைவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறோம்" என்று பிபிசிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :