வரலாறு படைத்த ஒபாமாவின் டிவிட்டர் பதிவு

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் விருப்பத்திற்குரிய தகவல் தொடர்பு சாதனமாக டிவிட்டர் சமூக வலைத்தளம் இருக்கலாம். ஆனால், டிவிட்டர் வரலாற்றிலேயே அதிகம் விரும்பப்பட்ட பதிவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒரு பதிவு இடம் பிடித்துள்ளது.

வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து தான் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்துடன், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாசகம் ஒன்றை மேற்கோள் காட்டி அவர் பதிவிட்டுள்ள மூன்று டிவீட்களில் ஒன்றுதான் அது.

வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சார்லட்ஸ்வில் நகரில் ஆகஸ்ட் 12 அன்று நடந்த நிறவெறி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 13 அன்று அவர் இட்ட பதிவுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கிரீன்விச் நேரப்படி, இன்று 01.07 மணிக்கு, அந்தச் சாதனை நடந்ததாக டிவிட்டர் நிறுவனத்தின் தரப்பிலிருந்து பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே மாதம், மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பாடகி அரியானா கிராண்ட் பதிந்த பதிவுதான் இதுவரை முதலிடத்தில் இருந்தது.

அந்த மூன்று தொடர் டிவீட்களில், நெல்சன் மண்டேலாவின் தன்வரலாற்று நூலான, 'தி லாங் வாக் டு ஃபிரீடம்' (The Long Walk To Freedom) என்னும் நூலில் இருக்கும் ஒரு வாக்கியத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

"தன்னுடைய தோலின் நிறம், பின்புலம் அல்லது மதத்தின் காரணமாகப் பிறரை வெறுக்கும் மனநிலையுடன் யாரும் பிறக்கவில்லை," என்னும் அந்தப் பதிவு, "மக்கள் பிறரை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நேசிக்கக் கற்றுக்கொடுக்க முடியும். மனித உள்ளத்திற்கு வெறுப்பதைவிட நேசிப்பது மிகவும் இயல்பாகவே வரும்," என்று முடிகிறது.

மாரிலாந்து மாகாணத்தில் உள்ள பெத்தேஸ்டா என்னும் இடத்தில் உள்ள குழந்தைகள் மையத்திற்கு, 2011-ஆம் ஆண்டு ஒபாமா சென்றபோது எடுக்கப்பட்ட படம் அந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது. அந்தப் படம் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞரான பீட் சோசாவால் எடுக்கப்பட்டது.

டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஒபாமா அதிபராக இருந்தபோது அவரின் அணுகுமுறைகளைப் பறைசாற்றும் வகையிலான புகைப்படங்களை பீட் சோசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :