You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல்லையில் மோதிய இந்திய - சீன படையினர்: கற்களை வீசி தாக்குதலா?
மேற்கு இமயமலையின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், இந்திய மற்றும் சீனபடையினர் இடையே மோதல் நடந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பான்கோங் ஏரிக்கு அருகே இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதையடுத்து, கற்களை வீசித் தாக்கிக்கொண்டதில் இரு நாட்டு வீரர்களும் லேசான காயமடைந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வீரர்கள் தங்களது நாட்டு எல்லைக்குள் தான்இருந்ததாகச் சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, பூட்டான் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் எல்லை பிரச்சினையின் காரணமாக இருநாடு உறவில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
லடாக் பகுதிக்கு அருகில், தனது பகுதி என இந்தியா உரிமைகோரும் இடத்திற்குள் சீனா ராணுவத்தினர் ஊடுவ முயன்றுள்ளனர்.
இதனையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து ஊடுருவலைத் தடுத்துள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ கூறுகிறது. இந்தப் பகுதியானது தங்களுடையது எனச் சீனா உரிமை கோருகிறது.
ஊடகத்தில் வெளியான செய்தியை தன்னால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என ஒரு ராணுவ அதிகாரி பிபிசியிடம் கூறினார். அத்துடன்,``இது போன்ற சம்பவம் நடப்பது முதல்முறையல்ல`` எனவும் அவர் கூறினார்.
``சீன மண்ணில் இருக்கும் தன் ராணுவத்தை இந்தியா உடனே திரும்பப்பெற வேண்டும்`` எனச் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த மோதல் நடக்கும் போது சீன வீரர்கள், சீனா எல்லைக்குள் தான்இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில், பொதுவாக வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு எதுவும் இல்லை என இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
மேலும், எல்லைக்கோடு குறித்து இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிகழ்வதாலே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன என்றும், எல்லைக் கோடுகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சர்ச்சைகள் தவிர்க்கப்படக்கூடும் என்றும் இந்தியாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டதற்கு எல்லைப் பிரச்சனையே முக்கிய காரணமாக இருந்தது. இன்னும் பல எல்லைப்பகுதிகளில் பிரச்சனை தீக்கப்படாமலே உள்ளதால், அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா - சீனா இடையேயான சமநிலையற்ற வர்த்தகம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :