You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: இனவாத எதிர்ப்பு குழு மீது காரை ஏற்றிய நபரின் பின்னணி என்ன?
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் சார்லட்ஸ்வில் நகரில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மீது காரை ஏற்றி, ஒரு பெண்ணை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் அலெக்ஸ் ஃபீல்ட்ஸ் ஜூனியர் என்ற 20 வயதான அந்த நபர் கென்டக்கி மாகாணத்தை சேந்தவர். இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே காரை ஏற்றிய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
``அவன், தீவிர வலதுசாரி கருத்துக்களை வெளிப்படுத்தியதில்லை``என ஜேம்ஸின் அம்மா உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளார்.
``ஜேம்ஸ், நாஜி இயக்க வழிகளில் நம்பிக்கை கொண்டவர் என்பதை அவரது உயர்நிலைப் பள்ளி ஆய்வு தெளிவாக காட்டுகிறது`` என ஜேம்ஸின் முன்னாள் பள்ளி ஆசிரியர் கூறுகிறார்.
``இரண்டாம் உலகப்போர் குறித்த ஆர்வத்தினால், பல சிறுவர்கள் ஜெர்மனி மீது நாஜி இயக்கத்தின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்,ஜேம்ஸ் தனது ஆர்வத்தை வேறு கட்டத்திற்கு எடுத்துசென்றார்`` எனவும் ஆசிரியர் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் அலெக்ஸ் ஃபீல்ட்ஸ் ஜூனியர் ராணுவத்திற்குத் தேர்வாகியிருக்கிறார். ஆனால், பயிற்சி தரநிலைகளில் சோபிக்காததால், டிசம்பர் 2015-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நீக்கப்பட்டுள்ள ஜேம்ஸின் ஃபேஸ்புக் கணக்கில், நாஜிசம் பற்றிய குறிப்புகளும் `மீண்டும் அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்புவோம்` என்ற கோஷம் கொண்ட படமும் இருந்ததாக பஸ்பீட் ஊடகம் கூறுகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலவே இருக்கும் ஒரு காரின் முன்பு நின்று ஜேம்ஸ் எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஃபேஸ்புக் கணக்கில் இருந்துள்ளது.
`வேன்கார்டு அமெரிக்கா` என்ற வெளிப்படையான பாசிச குழுவின் லோகோவுடன் ஒரு கவசத்தை ஜேம்ஸ் கையில் பிடித்திருக்கும் புகைப்படமும் கிடைத்துள்ளது.
``அமெரிக்கா தற்போது ஆபத்தில் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்காவைக் கட்டியெழுப்பிய வெள்ளை இன மக்கள் சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள். வெள்ளை இன மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரமிது`` என வேன்கார்டு அமெரிக்காவின் இணையத்தளம் கூறுகிறது.
ஜேம்ஸ் அலெக்ஸ் ஃபீல்ட்ஸ் ஜூனியர் தங்களது குழுவின் உறுப்பினர் அல்ல என வேன்கார்டு அமெரிக்கா டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :