You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்'
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்தியாளர்
பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது.
இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் எட்டாம் பாகம் இது.
நாடு பிரிக்கப்பட்டபோது மக்கள் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள், அவை முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது பேசப்பட்டவை, குறைந்தபட்சம் ஆதங்கத்தையாவது வெளிப்படுத்த முடிந்தவை.
உண்மை காதல் கதை
ஆனால், வெளியில் யாருக்கும் தெரியாத காதல் கதைகளும் அதில் சிதைந்து போயிருக்கலாம் என்பதை உணர வைக்கும் கதை இது.
காதலில் இணைவதற்காக மதத்தையும் நாட்டையும் மாற்றிய பிறகும், அரசாங்கத்துடன் போராடிய காதல் இது.
ராவல்பிண்டியில் படான் குடும்பத்தை சேர்ந்த 15 வயது இஸ்மத்தும், அமிர்தசரஸில் லாலாஜி குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது ஜீதுவும் காதலர்கள்.
விடுதலைக்கு ஓராண்டிற்கு முன்பு அதாவது 1946-இல் இரு குடும்பத்தினரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்துபோது, அங்கு சந்தித்து குடும்ப நண்பர்களானார்கள்.
இஸ்மத்தும், ஜீதுவுக்கும் இடையே காஷ்மீரில் காதல் ரோஜா மலர்ந்தது.
பிரிவினைப் புயல் காதலை வேரோடு சாய்த்துவிடும், ஜீதுவுடன் இணைவது கடினம் என்பதை இஸ்மத் புரிந்துக்கொண்டார்.
காதலுக்கு எல்லைகளும், அரசாங்க கொள்கைகளும் புரியுமா? சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத காதல், இஸ்மத்தை வீட்டை விட்டு வெளியேறி இந்துக்களின் அகதிகள் முகாமில் அடைக்கலம் புக வைத்தது.
'நான் இந்துப் பெண். என் பெற்றோரை தொலைத்துவிட்டேன். தயவு செய்து என்னை இந்தியாவில் கொண்டு விட்டுவிடுங்கள்' அகதிகள் முகாமில் சேர இஸ்மத் சொன்ன பொய் இது.
பிரிவினைக்கு பிறகு இரண்டு மாதங்கள், இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர். பல பெண்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு, விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்விக்கப்பட்டனர்.
இதனால் இரு நாட்டு அரசுகளும், காணாமல்போன பெண்களை தேடி, மீண்டும் அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கும், 'ஆபரேஷன் ரிகவரி' திட்டத்தை தொடங்கின.
இரு நாடுகளின் அகதிகள் முகாம்களில் இருக்கும் பெண்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் சமூக சேவகி கமலா படேல்.
பிரிவினை காலகட்டத்தில் பஞ்சாபில் இந்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கு, உடுக்கும் பாணி எல்லாம் ஒன்றுபோலவே இருக்கும்.
எனவே இஸ்மத்தை இந்து என்று நம்பிய கமலா படேல், அகதிகளுடன் சேர்த்து அவரையும் ராவல்பிண்டியில் இருந்து அமிர்தசரசுக்கு அனுப்பினார்.
அமிர்தசரஸில் இருந்து ஜீதுவின் வீட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டது. இஸ்மத் மைனராக இருந்தாலும், ஜீதுவின் பெற்றோர் அனுமதியோடு, அமிர்தசரஸ் பொற்கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் சுபம் போடுவது திரைப்படங்களில் தான் சாத்தியம், நிஜ வாழ்க்கையில் அதற்கு பிறகுதானே இன்னல்களும், இடர்பாடுகளும் ஏற்படும்?
தங்கள் மகள் கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசிடம் புகார் அளித்த இஸ்மத்தின் பெற்றோர், மகளை மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
கடத்தப்பட்ட பெண்களை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் சேர்க்க இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், இஸ்மத் - ஜீது காதல் தம்பதிகளின் திருமண ஒப்பந்தத்திற்கு தடைக்கல்லானது.
இஸ்மத்தின் பொய் நிரூபிக்கப்பட்டதால், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அச்சமடைந்த ஜீது, கமால் படேலை சநதித்து பேசினார்.
'இது கடத்தல் இல்லை, இஸ்மத்தும் நானும் காதலிக்கிறோம், தன்னுடைய விருப்பத்தின்படியே அவள் என்னைத் தேடி வந்திருக்கிறாள். எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்.'
மேஜராகாத தங்கள் மகள் கடத்தப்படவில்லை, அவள் விரும்பியே வீட்டை விட்டு வெளியேறினாள் என்று இஸ்மத்தின் பெற்றோர் ஏன் நம்பவேண்டும்?
அதுவும் பிரிவினை காலகட்டத்தில் நடந்த கொடுமைகளை நேரில் பார்த்தவர்களும், அதை கேட்டவர்களுக்கும் இதன் பொருள் மிகவும் நன்றாகவே விளங்கும்.
எனவே இந்த விவகாரத்தில் சலுகை எதுவும் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. இது காலத்தின் கோலம், பிரிவினையின் அலங்கோலம்.
இஸ்மத் மற்றும் அவரைப் போன்ற பெண்களை வலுக்கட்டாயமாக அடுத்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு கமலா படேல் மறுப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம், 'அரசியலமைப்பு சட்டசபை' (constitutional assembly) வரை சென்றுவிட்டது. பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒப்பந்தம் தொடர்ந்தது.
காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக காதல் கிளிகள் கல்கத்தாவுக்கு பறந்து சென்றன.
இங்கு, கமலா படேலின் குழுவினர் மீதான அழுத்தம் அதிகரித்தது.
இத நிகழ்வை பற்றி பிரிவினையின் நினைவுகளைப் பற்றி கமலா படேல் எழுதியுள்ள 'Torn from the Roots: A Partition Memoir' என்ற புத்தகத்தில், 'ஆப்பிள், ஆரஞ்சு போன்று பெண்கள் அங்கும் இங்கும் மாற்றப்பட்டனர்' என்று குறிப்பிடுகிறார்
'கடத்தப்பட்ட பெண்கள் அகதிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டபிறகு, அவர்கள் விருப்பப்பட்டால், மீண்டும் கடத்தப்பட்ட வீட்டிற்கே திரும்ப தப்பிக்க உதவி செய்தார் கமலா படேல்' என்று இந்த புத்தகத்தை வெளியிட்ட ரிது மேனன் என்னிடம் சொன்னார்.
அது அந்த காலகட்டத்தின் மனோபாவம். பெண்களின் விருப்பங்களையும் புரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.
உறவுகள் உருவாகும் சூழ்நிலைகளும் விசித்திரமாகவே இருந்தது. ஆனால், உருவான உறவுகளை விட்டு வெளியேறுவதைவிட அதிலேயே தொடர்வதே சிறந்ததாகவும் இருந்தது.
இன்றைய சூழ்நிலையில் இதைப் புரிந்துக் கொள்வது விசித்திரமாக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழ்நிலை, மக்களின் மனோபாவம் அது.
விருப்பத்திற்கு எதிராகவே என்றாலும்கூட, பிறரின் மனைவியாக சில நாட்கள் இருந்துவிட்டு திரும்பிவந்தால் எதிர்கால வாழ்க்கை என்ன என்பது உட்பட பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இஸ்மத்-ஜீது விவகாரமும் இதுபோன்றே சிக்கலானது என்றாலும், அரசாங்க இயந்திரம் இதை நெருக்கமாக பார்க்க விரும்பவில்லை.
காதலர்கள் வரவழைப்பதற்கான உபாயமாக, 'பாகிஸ்தான் அரசு இந்த வழக்கை முடித்துவிட்டது' என வதந்தி பரப்பப்பட்டது. காதல் பறவைகள் தங்கள் கூட்டிற்கு திரும்பின.
இஸ்மத்திடம் பேசிய கமலா படேல், அவரை ஒரு வாரத்திற்கு மட்டும் லாகூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.
அங்கிருக்கும் காவல்துறை ஆணையரின் முன்னிலையில் பெற்றோருடன் பேசிவிட்டு, அங்கேயே இறுதி முடிவை சொல்லலாம், இதுவே சட்டப்படி சாத்தியமான தீர்வு என்றார் கமலா படேல்.
இது கமலா படேலின் கருத்துக்கு எதிரானதாக இருந்தாலும், சட்டத்தின்படியே நடக்கவேண்டும். வருத்தத்துடனே கமலா படேல் இந்த முடிவை எடுத்தார்.
"அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் இருந்தது, பலரின் வாழ்க்கை முடிவுகளை எடுக்க வேண்டிய அழுத்தம், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இந்த அகதிகள் முகாமில் இருந்த அவருக்கு உண்பதைக்கூட மறக்கடித்துவிட்டது" என்று கமலா படேலின் உறவினர் நைனா படேல் கூறுகிறார்
'ஆபரேஷன் ரிகவரி'யின் கீழ் ஏறக்குறைய 30 ஆயிரம் பெண்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களில் இஸ்மத்-ஜீது போன்ற நூற்றுக்கணக்கான காதலர்களும் அடங்குவார்கள், ஆனால் அவர்கள் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை.
கமலா படேலின் புத்தகத்தில் இஸ்மத்-ஜீது என்ற ஒரு காதல் ஜோடி பற்றிய குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.
அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இஸ்மத்தை லாகூரில் ஒப்படைத்த ஜீது, காதல் மனைவியின் வருகையை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்.
இஸ்மத்தின் பெற்றோர், மகளை தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்ட செய்தியைக் கேட்ட கமலா படேலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
உடனே கமலா படேல், இஸ்மத்தை சந்திக்க பாகிஸ்தான் சென்றார், ஆனால் அங்கு கதை மாறியிருந்தது. இஸ்மத்தின் நடை உடை பாவனைகள் மாறியிருந்தன.
கமலா படேலை நோக்கி விரலை நீட்டி இஸ்மத் சொன்னார், "நான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று திரும்பத்திரும்ப கேட்டும், இந்த பெண்மணி என்னை பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுத்தார்".
ஜீதுவின் பெயரை கேட்டதுமே சீறிவிழுந்த இஸ்மத், "அந்த நாஸ்திகனின் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை, என்னால் முடிந்தால் அவனை வெட்டி துண்டுகளாக்கி நாய்களுக்கு இரையாக போடுவேன்"
கமலா படேலுக்கு என்ன சொல்லமுடியும்? ஆனால் அதன்பிறகு இஸ்மத்தின் குடும்பம் எங்கே போனது என்று தெரியவில்லை.
உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும், லாகூரிலேயே தங்கி இஸ்மத்தை தேடினார் ஜீது.
பிரிவினையின் அனல் கனலாக கனன்று கொண்டிருந்த நேரம் அது. ஜீதுவிற்கு நிலைமையை புரிய வைக்க கமலா படேல் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின.
"நான் முற்றிலுமாக உடைந்து நடைபிணமாகத்தான் என்னவளை தேடிக்கொண்டிருக்கிறேன், பிணமானால் தான் என்ன?" என்பதே ஜீதுவின் பதிலாக இருந்தது. நிறைய பணம் செலவானது, அந்த அப்பாவிக் காதலனை காசநோயும் விட்டுவைக்கவில்லை.
ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீதுவை மீண்டும் கமலா பார்த்தபோது, அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தான். முகத்தில் மஞ்சள் பூத்திருந்தது, அவர் தனியாகவே இருந்தார்.
பிரிவினை நிர்ணயித்த எல்லைக் கோடுகள் பிரித்தது நாடுகளை மட்டுமா? மக்களின் வாழ்க்கையை, இடத்தை, வாழ்வாதரத்தை மட்டுமா? இல்லை, காதலனிடம் இருந்து காதலியை, கணவனிடம் இருந்து மனைவியை, பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை… சொல்லப்படாத கதைகள் இன்னும் எத்தனை எத்தனையோ!
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :