ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவமனை வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக, அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது ஒரு நல்ல நடவடிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையைச் சேர்ந்த சிறந்த மருத்துவர்களும், சென்னை, சிங்கப்பூர், தில்லி எய்ம்ஸ், பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த மருத்துவர்களும் நிபுணர்களும் அளித்த சிறப்பான சிகிச்சை குறித்த தகவல்களை இந்த ஆணையம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்றப் போராடிய அப்பல்லோ மருத்துவமனைக் குழு நம்புவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு உயர்ந்த சிகிச்சையளிக்கப்பட்டும் முதலமைச்சரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் தங்களது மிகப்பெரிய வருத்தம் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, எந்த ஆதாரமுமின்றி உலாவரும் கருத்துக்களை, அரசு நியமிக்கவுள்ள ஆணையத்தின் அறிக்கை முடிவுக்குக் கொண்டு வரும் என நம்புவதாகவும் அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சலும் நீர்ச்சத்துக் குறைவும் இருப்பதாக அம்மருத்துவமனை தெரிவித்தது.

ஆனால், அதைத் தொடர்ந்த சில நாட்களில் ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நலப் பிரச்சனைகள் குறித்து சில தகவல்கள் வெளியிடப்பட்டன.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் ஜெயலலிதாவை அவரது அருகே சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :