You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
13 ஆண்டுக்கு முன் காணாமல் போன வைர மோதிரம் கேரட்டுக்குள் சிக்கிய அதிசயம்!
வைரத்தின் எடையை கேரட் என்னும் அலகால் மதிப்பிடுவது வழக்கம். கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த மோதிரத்தில் இருந்த வைரம் எத்தனை கேரட் என்பது தெரியாது. ஆனால், எதிர்பாராத ஆச்சரியமாக அந்த வைர மோதிரத்தை மீட்டுத் தந்திருக்கிறது ஒற்றை கேரட்.
2004 ஆம் ஆண்டு அல்பெர்டாவில், தனது குடும்பத்துக்கு சொந்தமான காய்கறி பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேரி கிராம்ஸ் தனது வைர மோதிரத்தைத் தவறவிட்டார். இதனால் மிகவும் வருத்தத்துக்குள்ளானார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது.
ஆனால், மோதிரம் தொலைந்த சம்பவத்தை ஒரு தசாப்தத்த்திற்கும் மேலாக மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் மேரி கிராம்ஸ். தம் கணவரிடமும் கூறாமல் மறைத்த இந்த ரகசியத்தை அவர் தம் மகனிடம் மட்டும் கூறியிருந்தார்.
தொலைந்த மோதிரத்துக்கு பதிலாக மலிவு விலைகொண்ட மோதிரம் ஒன்றை வாங்கி அணிந்து கொண்ட மேரி, அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்காததை போன்று சமாளித்து வந்தார்.
கடந்த திங்கள்கிழமையன்று, மேரி கிராம்ஸின் மருமகள் கொலீன் டேலீ தங்கள் காய்கறி தோட்டத்தில் நல்ல தடிமனான கேரட் ஒன்றை பிடுங்கியபோது, அத்தோடு சேர்ந்து மோதிரம் காணாமல் போன ரகசியமும் வெளேியே வந்தது! ஆம், அந்தக் கேரட்டுக்கு நடுவே காணாமல் போன வைர மோதிரம் சிக்கிக்கொண்டிருந்தது.
மண்ணுக்குள் பல ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த வைர மோதிரத்தின் ஊடாக வளர்ந்த அந்தக் கேரட், பல ஆண்டுகளுக்குப் பிறகு மோதிரம் கண்டுபிடிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.
கேரட்டோடு கண்டெடுக்கப்பட்ட மோதிரம் யாருடையது என்பதைத் தெரிந்து கொண்ட மேரியின் மகன் உடனடியாக தம் தாயைத் தொலைப்பேசியில் அழைத்து தகவலைத் தெரிவித்தார்.
பழைய சம்பவங்களை நினைவு கூறும் மேரி, மோதிரம் தொலைந்த விஷயத்தை தனது கணவரிடம் அப்போதே சொல்லியிருக்கலாம் என்கிறார்.
மேரியின் கணவர் தற்போது உயிருடன் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
கேரட் ஒன்றில் வைர மோதிரம் கிடைக்கும் சம்பவம் முதல்முறையாக நடக்கவில்லை. ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருவர் தான் தவறவிட்ட திருமண மோதிரத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த சம்பவம் 2011-ல் நடந்தது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :