டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர்

பட மூலாதாரம், AFP
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது.
தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீது பாதகம் விளைவிக்ககூடிய ஆதாரங்கள் டிரம்பின் மகனுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக அவரது மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் ரஷ்ய வழக்கறிஞர் நடாலியா வெசெல்னிட்ஸ்கயா மட்டும் கலந்து கொண்டதை டிரம்ப் ஜுனியர் முன்பு ஒப்புக்கொண்டார்.
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற்ற சந்திப்பு குறித்தான செய்திகள் இந்த வாரம் வெளியாகும் வரை அமெரிக்க அதிபரின் மூத்த மகன் இந்த விவகாரத்தின் மீது குறைவான முக்கியத்துவம் மட்டுமே அளித்து வந்தார்.
ஆனால், 39 வயதாகும் டிரம்ப் ஜுனியர் இதுகுறித்து சாட்சியம் அளிக்குமாறு அமெரிக்க செனட் நீதித்துறைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற உதவி செய்யும் முயற்சியில் ரஷ்யா தலையிட்டதை உறுதிப்படுத்த பல்வேறு காங்கிரஸ் குழுக்கள் மற்றும் மத்திய புலனாய்வாளார்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிபரின் மைத்துனர் ஜாரெட் குஷ்னர் மற்றும் தேர்தல் குழு தலைவரான பால் மனஃபோர்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரஷ்ய உறுப்பினர்களுக்கும் டிரம்பின் தேர்தல் பிரச்சார குழு உதவியாளார்களுக்கும் இடையே நடைபெற்ற முறையற்ற இராஜாந்திர பேச்சுவார்த்தைகளுக்கான உறுதியான ஆதாரமாக இது வெளியாகியுள்ளது.
கடந்த வியாழனன்று ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப்,` பெரும்பாலானவர்கள் அந்த சந்திப்பு குறித்து பேசுகிறார்கள்` என்று தெரிவித்த அவர், அந்த சந்திப்பில் ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரினாட் அக்மெட்சின் என்பவர் யார்?
ஏபி செய்தி நிறுவனத்திடம் பேசிய அக்மெட்சின், புலனாய்வுத்துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்த சோவியத் இராணுவ படையில் தான் பணியாற்றியதாகவும், ஆனால் ஒரு உளவாளியாக எனக்கு முறையாக பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுரங்க நிறுவனம் ஒன்று, தனது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு விவகாரத்தில் அதன் தனிப்பட்ட விவகாரங்களை முறையற்ற வகையில் எடுத்ததாக 2015-ம் ஆண்டு வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், HERMITAGE CAPITAL
அக்மெட்சினை லண்டனில் பின்தொடர சர்வதேச கனிம நிறுவனம் ஒரு தனியார் புலானாய்வாளரை நியமித்தது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை அக்மெட்சின் மறுத்துவந்தார், பின்னர் அந்த வழக்கு கைவிடப்பட்டது.
ரஷ்ய அரசாங்கத்திற்கு அக்மெட்சின் குறித்து எதுவும் தெரியாது என்று கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் பேசிய அக்மெட்சின் 2009-ம் ஆண்டு தான் அமெரிக்க குடியுரிமை பெற்றதாகவும், ஆனால் ரஷ்ய குடியுரிமையை தக்கவைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் அக்மெட்சின் ஏன் கலந்து கொண்டார்?
வாஷிங்டன் செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து தெரிவித்த அக்மெட்சின், மதிய உணவுக்கு பின் வெசெல்னிட்ஸ்கயாவை சந்தித்த அத்தருணத்தில் அவருடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மான்ஹேட்டன் ஸ்கைஸ்கேரப்பர் எனும் இடத்தில், ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு அவரை சந்தித்தித்தகாவும் கூறினார்.
மேலும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் தாங்கள் சந்தித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
` இது மிகப்பெரிய விவகாரமாக மாறும் என்று உண்மையாகவே நான் நினைக்கவில்லை` என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்ய பாஸ் ஸ்டார் எமின் அகலரோவ்-ன் இசையை வெளியிடும் பிரிட்டன் இசை வெளியீட்டாளர் ராப் கோல்ட்ஸ்டோன் என்பவரின் மூலம் இந்த கூட்டம் கட்டமைக்கப்பட்டது.
டொனால்ட் டிரம்பின் மூத்த மகனுடன் அகலரோவ் 2013-ம் ஆண்டு மாஸ்கோவில் பணியாற்றியுள்ளார்.
கூட்டம் எதைப்பற்றியது?
ரஷ்யாவின் அரச வழக்கறிஞர் வெசெல்னிட்ஸ்கயா ஹிலரி கிளிண்டன் குறித்து பாதகம் விளைவிக்கக்கூடிய தகவல்களை இந்த சந்திப்பில் வழங்குவார் என்று கோல்ட்ஸ்டோன் டிரம்ப் ஜுனியருக்கு உறுதியளித்துள்ளதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் ரஷ்ய குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறித்து தன்னிடம் வெசெல்னிட்ஸ்கயா விவாதிக்க விரும்பியதாக அவர்கள் தெரிவித்ததுதான் வெளிப்படையான உண்மை என டிரம்ப் ஜுனியர் தெரி்வித்துள்ளார்.
ஆனால், அக்மெட்சின் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், ஜனநாயக தேசிய குழு சட்டவிரோத நிதிகளை பெற்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக வெசெல்னிட்ஸ்கயா டிரம்ப் ஜுனியரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்கான ஆதாரம் உள்ளதா என்று டிரம்பின் மகன் வினவியதாகவும், அதற்கு டிரம்பின் தேர்தல் பிரச்சாரக்குழு இது குறித்து ஆரய வேண்டும் என்று வெசெல்னிட்ஸ்கயா பதிலளித்தார் என்பதே அக்மெட்சின் வாதமாக உள்ளது. மேலும் அதிபரின் மகன் ஆர்வமிழந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்!
- கங்னம் ஸ்டைலை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்ற `சீ யு எகைன் '
- ஏ.ஆர் ரஹ்மானின் லண்டன் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள்
- 20 ஆண்டுகளாக ராணுவம் இல்லாத நாடு: புதிய படை தயாராகிறது 500 பேருடன்!
- இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்ய எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













