கங்னம் ஸ்டைலை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்ற `சீ யு எகைன் '

பட மூலாதாரம், Schoolboy/Universal Republic Records
தென் கொரிய பாடகர் சை பாடிய ,மிகப்பிரபலமான `கங்னம் ஸ்டைல்` பாடல், யூ டியூபில் அதிக பார்வைகள் கொண்ட பாடல் என்ற பெருமையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இழந்துள்ளது.
பொதுவாக யு டியூபில் பதிவேற்றம் செய்யப்படும் ஒரு வீடியோ , அதிகபட்சமாக 2,14,74,83,647 பார்வைகளை பெற முடியும் அளவுக்குத்தான் அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் `கங்னம் ஸ்டைல்` பாடலுக்கான பார்வைகள் அந்த எண்ணிக்கையையும் தாண்டிச் சென்றதால், வேறு வழியின்றி யு டியூப் நிறுவனம் தனது கட்டமைப்பை அதிக எண்ணிக்கையில் பார்வைகள் பெறும் வகையில் (92,23,37,20,36,85,47,75,808) மேம்படுத்தியது.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த இந்த பாடலின் சாதனையை விஸ் கலீஃபா மற்றும் சார்லி புத் இணைந்து உருவாக்கிய `சீ யூ எகைன்` என்ற பாடல் வீடியோ தற்போது முறியடித்துள்ளது.
இதயத்தை பிழியும் இந்த பாடல், தற்போது வரை 2,895,373,709 பார்வைகளை பெற்று, கங்னம் ஸ்டைல் பாடல் செய்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.

பட மூலாதாரம், Atlantic Records
யு டியூப் தளத்தில் `சீ யூ எகைன்' பாடல் பார்க்கப்பட்ட நேரத்தை கணக்கிட்டால், அது 21,759 ஆண்டுகளுக்கு சமமாகும்.
இந்த பாடல், ஹாலிவுட் அதிரடி திரைப்படமான ` தி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்-7` திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்திருந்த, படம் வெளியாகும் முன்னரே கார் விபத்தில் பலியான நடிகர் `பால் வாக்கர்`-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Universal Studios
2015-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்பனையான பாடல் என்ற சாதனையையும் `சீ யூ எகைன்` படைத்திருந்தது.
இந்த பாடல் யு டியூப் தளத்தில் வெளியான ஆறு மாதங்களில் 1 பில்லியன் பார்வைகளை கடந்தது.
ஆய்வுகளின்படி, யு டியூபில் அதிகம் பார்க்கப்படும் முதல் 50 வீடியோக்களில், 47 வீடியோக்கள் இசை வீடியோக்களாக இருக்கின்றன.
துல்லியமாக கணக்கிட்டால், `சீ யூ அகைன்` பாடல் யு டியூபில் பெற்றுள்ள பார்வைகளுக்காக, விஸ் கலீஃபா மற்றும் சார்லி புத் ஆகியோருக்கு யு டியூப் நிறுவனம் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளித்திருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












